சனி, 15 நவம்பர், 2014

ஜும்ஆ!!


ஜும்ஆ!!
பாடம் : 1 வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வோர் ஆண்மீதும் கடமையாகும் என்பதும், அது தொடர்பாக வந்துள்ள கட்டளையின் விவரமும். 
1535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
Book : 7

1536. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் வெள்ளிக்கிழமை அன்று (மதீனாவைச் சுற்றியுள்ள) மேட்டுப்புறக் கிராமங்களிலிருந்த தங்கள் குடியிருப்புகளிலிருந்து முறைவைத்து (தொழுகைக்கு) வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் நீளங்கி அணிந்து வருவர். அவர்கள்மீது புழுதி படிந்து அவர்களின் உடலிலிருந்து (வியர்வையின்) துர்வாடை வரும். (இந்த நிலையில்) அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தபோது வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்றைய நாளுக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) மக்கள் உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களிடம் (அவர்களின் பணிகளைக் கவனிக்க) வேலை யாட்கள் இருக்கவில்லை. எனவே, அவர்கள் மீது (வியர்வையின்) துர்வாடை வீசும். இதனால்தான், "நீங்கள் வெள்ளிக்கிழமை குளித்தால் என்ன?" என்று அவர்களிடம் கூறப்பட்டது. 
Book : 7
பாடம் : 2 ஜுமுஆ நாளில் நறுமணம் பூசுதலும் பல் துலக்கலும்.
1537. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்; இன்னும் பல்துலக்குவதும்தான். மேலும்,கிடைக்கின்ற நறுமணத்தைப் பூசிக்கொள்ள வேண்டும்.- இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் புகைர் பின் அல்அஷஜ்ஜு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பெண்களின் நறுமணப் பொருளாக இருந்தாலும் சரியே"என்று இடம்பெற்றுள்ளது. 
Book : 7
1538. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமைக் குளியல் பற்றிய நபிமொழியை அறிவித்த போது, அவர்களிடம் நான் "ஒருவர் (தம்மிடம் இல்லாவிட்டால்) தம் வீட்டாரிடம் இருக்கும் நறுமணத்தையோ எண்ணெயையோ பூசிக் கொள்ள வேண்டுமா?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இது பற்றி எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. 
Book : 7
1539. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு நாட்களுக்கு ஒரு முறை (வெள்ளிக்கிழமை அன்று) தம் தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது, ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்காகச் செய்ய வேண்டிய கடமையாகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். 
Book : 7
1540. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளியன்று குளித்துவிட்டு (நேரத்தோடு பள்ளிவாசலுக்கு)ச் செல்பவர், ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். (அதற்கடுத்த) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
Book : 7
Engr Sulthan


news mail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக