தமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும்
கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா? என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும்நடத்திய கட்டுரைப்போட்டியில் 2ம் இடம் பெற்ற சகோதரி அன்னு அவர்களின் கட்டுரை இது. கல்வியில் இஸ்லாமிய சமூகத்தின் ஆரம்பகால எழுச்சிமிக்க பக்கங்களும், வீழ்ந்த காரணங்களும் என வரலாற்று ஆய்வுடன் எழுதப்பட்ட இக்கட்டுரை ஒவ்வொர் முஸ்லிமும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது! முழுமையாக படியுங்கள். மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்துக்கொள்ளுங்கள்!!!
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்- இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள்.
- முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே.
- இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 28.3 சதவிகிதத்தினர் மிக மோசமான வறுமையில் வாழ்கிறார்கள்.
- நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது.
- நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே.
- தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.
- தலித்துகளில் 32 சதவிகிதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிகிதத்தினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர்.
- பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது.
- தற்போதைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகையான 13.4 சதவிகிதத்திற்கு சுமார் 70 - 75 முஸ்லிம் எம்.பி-க்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முஸ்லிம் எம் பி-க்களின் எண்ணிக்கை 33 மட்டுமே!
- மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம்.
இப்படிப் போகிறது அந்த அறிக்கை A1.
யாருடைய அறிக்கை? ஏழு வருடங்களுக்கு முன், 2005இல் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கால் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ‘சச்சார் கமிட்டி’யின் அறிக்கைA2.
யாரைப் பற்றி?
"இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." என இல்லஸ்டிரேட்டட் வீக்லி 29-12-1975 தேதியிட்ட இதழில் எழுதினாரே குஷ்வந்த்சிங், அந்த இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி....சுருக்கமாக சொன்னால்,
தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்.
முஸ்லிம்கள் இந்திய மக்கள் தொகையில் 14%க்கு மேல் இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த சதவீதம் வெறுமனே 2.5% மட்டுமே என்பவைதான் அந்த அறிக்கை தரும் அதிர்ச்சி.
நிற்க. 2005இல் இந்த அறிக்கை வெளியாகியதிலிருந்து, நம் சமூகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல நாம் என்ன திட்டங்கள் செய்துள்ளோம்?? இன்று நம் சமுதாயத்தில் அதிக அளவிலான குழந்தைகள் கல்வி கற்றுக்கொண்டுள்ளன. ஆயினும் ஒரு தனி மனிதனின் கல்வி பற்றிய சிந்தனைக்கும், நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் இடையே எத்தனை எத்தனை பிளவுகள்??? ஏன் இந்த நிலை? அரசு தன் வாக்குறுதிகளை பொய்ப்பிக்கிறது என்று வரலாற்றின் அத்தனை பக்கத்திலும் தெரிந்து கொண்ட பின்னரும், நம் சமுதாயத்தை முன்னேற்ற நாம் ஏன் எந்த அடியையும் இன்னும் எடுக்கவில்லை? யார் இதற்கு காரணம்? ஏன் இதை நிவர்த்தி செய்ய முயலாமலே நாம் ஓடிக்கொண்டுள்ளோம்? எதனை நோக்கி? இந்த ஓட்டத்தில் நம் தமிழக முஸ்லிம் சமுதாயம் எத்தனை தாக்குப் பிடிக்க முடியும்? சிந்தித்தோமா??? இனியும் சிந்திப்போமா??? வாருங்கள் பொன்னேட்டில் பதியப்பட்ட நம் வரலாற்றையும், வளமான எதிர்காலத்திற்கான இப்போதைய திட்டங்களையும் சற்றே மறு ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாத்தில் கல்வியின் மாண்பு:
”96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.”இதுதான் இவ்வுலகின் இறுதித்தூதரான முஹம்மத் நபியவர்களுக்கு இறைவன் இறக்கி வைத்த முதன் முதல் வசனம். இதை விடப் பெரிய சான்று வேறென்ன இருக்கக்கூடும், இஸ்லாத்தில் கல்விக்கு தரப்படும் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குவதற்கு?
இறைமறையின் பல இடங்களில் அல்லாஹ் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றான். கற்றோரும் கல்லாதோரும் சமமாகவே முடியாது என்கிறான்1. இன்னும் மனிதனின் கற்கும் ஆர்வத்திற்கென எப்படி அதற்கென தம்மிடத்தில் இறைஞ்சுவது என இறைவனே கற்றுத் தருகிறான்2. மனிதர்களை ஆராயச்சொல்லியும், சிந்திக்கும்படியும் அல்குர்ஆனில், சுமார் 35 இடங்களில் கூறுகின்றான்3; கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு சுமார் 50 இடங்களில் அறிவுறுத்துகின்றான்; பிரபஞ்சம் தொடர்பாகவும் அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் சுமார் 750 வசனங்களில் பேசுகின்றான்; இயற்கை விஞ்ஞானம், வானவியல், தாவரவியல், விலங்கியல், விவசாயம், மானிடவியல், மனோதத்துவம், மருத்துவம், சமூகவியல், வரலாறு, புவியியல் என கிட்டத்தட்ட மனித வாழ்வில் பங்கு வகிக்கும் எல்லாத் துறைகளுடன் தொடர்பான பல உண்மைகளும், அவற்றோடு தொடர்புடைய பல அடிப்படைகளும் குறிப்பிடுகின்றான். கல்வியின் மேன்மை பற்றிக் குறிப்பிடும்போதும், தன்னை அறிஞர்கள் மட்டுமே அஞ்சுவர் என்றே குறிப்பிடுகிறான்4.
இறைமறை மட்டுமல்லாது மாநபியின் மணிமொழிகளிலும் கல்விக்கான முக்கியத்துவம் எண்ணற்ற வகைகளில் வெளிப்படுகின்றது. கல்வியைத் தேடி நடப்பவர்க்கு சுவர்க்கத்துப் பாதை எளிதாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது5. உயிரோடிருப்பவர் மட்டுமல்ல, மரித்தவரின் பின்னேயும், அவர் தானே கற்றுப் பரப்பிய கல்வியானது செல்லும் என ஹதீஸில் உள்ளது6. தான் கல்லாதவராக இருந்தாலும், இறை நம்பிக்கையாளர்கள் அனைவரையும் கற்கச்சொல்லி ஊக்குவித்த தலைவராகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்துள்ளார். அறிவியலுக்கு முரணான யூகங்களை ஏனைய மார்க்கங்கள் மறுத்துரைக்கும் வேளையில், அனைத்து நம்பிக்கைகளும் (மார்க்க நம்பிக்கைகள் உட்பட) உறுதியான அறிவின் அடிப்படையில் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பது இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே..! இவ்வாறு இவ்வுலக வாழ்விலும், மறுமை வாழ்விலும் வெற்றி பெறும் வழிகளை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் எத்தி வைக்கும் மார்க்கத்தில் வாழும் நாம், அந்தக் கல்வியை எப்படி பெறுவது என்பதையும், அதனிலிருந்து நம் வெற்றிக்கு தயார் செய்வது எப்படி என்பதையும் திட்டமிடுகின்றோமா?? நம் முன்னோர்களின் கல்வி எந்நிலையில் இருந்தது, நாம் எந்நிலையில் உள்ளோம் என சிந்திக்கின்றோமா? உலக வரலாற்றிலே ஒவ்வொரு துறையிலும் இஸ்லாத்திற்கென ஒரு இடத்தை தக்க வைத்த நம் முன்னோர், கல்வியில் மட்டும் சவலைப்பிள்ளையாகவா இருந்தனர்??? இல்லை. இல்லவே இல்லை. இது வரை தெரியாமல் இருப்பினும் இனியாவது தெரிந்து கொள்வோம் நம் பாரம்பரியத்தை, கல்வியில் நம் சாதனைகளை..!
இஸ்லாமிய கல்விக் கொள்கை:
இஸ்லாமிய மார்க்கத்தின் கல்விக்கொள்கையை ஒரு வாக்கியத்தில் சொல்வதென்றால்... ’அல் ஃபவ்ஸ் பி அல் ச’அதா ஃபீ அல் தரய்ன்’ (الفوز بالسعادة في الدارين) என்று கூறலாம். தமிழில், ஈருலகிலும் (இறைவனின்) அருளை வென்று வாழ்வது எப்படி என்று எளிமைப் படுத்தலாம். அதாவது, நம் கல்வியானது இந்தக் கொள்கையை முன்வைத்தே, இந்த நெறிகளுக்குட்பட்டே இருக்க வேண்டும்.அந்தக் கொள்கை என்ன, அதை எப்படி புரிந்து கொள்வது..?
மிக எளிது. இஸ்லாத்தில் ‘கற்றல்’ என்பது...
1. இறைவனின் நாட்டம் என்ன என்பதை அறிய, அதன் படி தன் வாழ்வை அமைக்க உதவுவது.
2. இஸ்லாம் கூறும் நற்குணங்கள் கொண்டு தம்மை பக்குவப்படுத்த, அதன்வழி ஒரு தனித்துவத்தை உருவாக்க உதவுவது.
3. தனி மனித ஒழுக்க மேம்பாடுக்கு வலிமை சேர்ப்பது7.
இப்படி ஒரு கொள்கை விவரிக்கப்படும்போது, கல்வி கற்பது என்பது ஒரு இபாதத்தாக, இறைவணக்கமாக, கட்டாயக்கடமையாக ஆகிவிடுகிறது8. இதனாலேயே இஸ்லாத்தில் இல்மும், அமலும் வேறு வேறல்ல, வாழ்க்கைக்குறிப்புக்களும் (தா’லீம்), பயிற்சி முறையும் (தா’தீப்) ஒன்றை விட்டு ஒன்று எந்தப் பொருளும் தருவதல்ல என்றாகிறது. இந்தக் காரணங்களாலேயே பண்டைய காலங்களில் இஸ்லாமியக்குடும்பங்கள் கல்வி பெறுவதையும், கற்றுத் தருவதையும் முழுமைப்படுத்தப்பட்ட ஒரு இபாதத்தாக பார்த்தன. அது மார்க்கக் கல்வியாயினும் சரி, இஸ்லாமியக் கல்வியாயினும் சரி. வரலாறு முழுவதும் கல்வியையும் கற்பவர்களையும், கல்வியாளர்களையும் இஸ்லாமிய மக்கள் எவ்வாறு பெருமதிப்புடன் நடத்தி வந்துள்ளனர் என்பதை.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவது, இறைவணக்கமே என்றே அர்த்தம் கொண்டிருந்தார்கள். அகிலம் முழுவதும் பரவியிருந்த இஸ்லாமிய மக்கள் எல்லோரின் மனநிலையும் இதே போல் இருந்ததால்தான் கல்வி கற்கவும், கற்பிக்கவும் தூர தேசங்களுக்கு பயணம் செய்யவும் தயங்குவார் யாருமில்லாமல் போனது. எனவேதான் மொகலாய ஆட்சியைப் பற்றிய தனது நூலில், வரலாற்றாசிரியர் குலாம் அலி ஆஸாத் பில்கிராமி கூட, வளமான மக்கள், கற்பவர்களையும், கற்பிப்பவர்களையும் விருந்தோம்புவதை மிக்க மேலான ஒரு கவுரவமாகவே கருதினர் என்று குறிப்பிடுகிறார்9. அக்காலத்தில் ஆசிரியர்களின் ஊதியம் மிகக்குறைந்ததே எனினும், சமுதாயத்தில் அசைக்க முடியாத ஒரு பொறுப்பில் இருந்தனர். சமுதாய மக்கள் அனைவரின் நன்மதிப்பையும், போற்றுதலையும் பெற்றிருந்தனர். அகிலம் முழுவதும் கிலாஃபத்தின் ஆட்சி நடந்த இடங்களிலெல்லாம் இப்படியான ஒரு முன்னேற்றப்பாதையே ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அதே காலகட்டத்தில் இந்தியாவில் இஸ்லாமியர்களும், அவர்களின் கல்வியும் எந்த நிலையில்தான் இருந்தது??
இந்திய முஸ்லிம்களும் கல்வியும்.
காலனியாதிக்கத்திற்கு முன்:
தென்னகத்தை ஆண்டு வந்த சேர்மான பெருமாளால் முதல் இஸ்லாமியரைப் பெற்ற இந்தியா, எட்டாம் நூற்றாண்டில் உமய்யத் வம்சத்தின் ஆட்சியின் மூலம் இன்னும் அதிகமாக பிரகாசிக்கத் துவங்குகிறது. கி.பி 712இல் முஹம்மத் பின் காஸிம் என்னும் உமய்யத் பேரரசர் சிந்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலிருந்து இந்தியா, இஸ்லாத்தை மார்க்க ரீதியாக, ஒரு கட்டமைப்பாக சந்திக்கிறது. 1206இல் பிரித்திவிராஜ் சௌஹானுக்கெதிரான, சுல்தான் முஹம்மத் கோரியின் வெற்றியைத் தொடர்ந்து 1526 வரையிலும் இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சி நடை பெறுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியால் நாட்டை அபகரிக்கும் வரை...!பிரித்தானியக் கொள்ளைக்காரர்களின் சூழ்ச்சி தெரிய வரும் முன்னர் வரை சாந்தியும் சமாதானமும் கோலோச்சிய அந்தக் காலகட்டத்தில் இஸ்லாம், ஒரு புதிய பார்வையை இந்தியர்களுக்கு சுவைக்கத் தருகிறது. இஸ்லாமிய ஆட்சியில் பல்வேறு விதமான கல்விக்கூடங்கள் இந்தியாவில் நிறுவப்படுகின்றன. மக்தபுகள், மதரஸாக்கள், மசூதிகள், க்ஹன்காஹ்க்கள் (khanqahs - சூஃபிக்களின் கல்வி நிலையம்) மற்றும் தனி மனிதனின் வீடுகள் என எல்லா இடங்களும் கல்வி நிலையங்களாயின. கிட்டத்தட்ட ஒவ்வொரு மசூதியுமே அப்போது ஒரு தொடக்கப்பள்ளியாக இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. இப்போதுள்ளது போல், மாணவர் விடுதியில் குளிர்சாதன வசதி உண்டா.... மாணவர்கள் வந்து போக வாகன வசதி உண்டா என்றெல்லாம் யோசிக்காத, யோசிக்கத்தெரியாத காலம் அது. எந்த வீட்டின் முன் திண்ணை பெரியதாக, காலியாக இருக்கிறதோ அங்கே ஆசிரியர் தம் மாணவர்களுடன் வந்து பாடம் நடத்தத் தொடங்கி விடுவார்10. சம்பளம் என்றால் என்னவென்றே தெரியாத ஆசிரியர்களும் இருந்தார்கள். ஆசிரியர்களின் பின்னேயே அலைந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு தேவைப்படின் உடல் வருந்தி உழைத்து உதவும் ஆசிரியர்களும் இருந்தார்கள், அன்று. தேவைப்பட்டதெல்லாம் இருவர் மட்டுமே. கல்வி கற்கும் நேர்மையான எண்ணத்தைக் கொண்டதொரு மாணவன், கற்பித்துக் கொடுக்க அப்பழுக்கில்லாத ஒரு ஆசிரியர். அவ்வளவே.
கல்விக்கு மக்களே உதவுகிறார்களே நமக்கென்ன என அரசு வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றதா.... அதுதான் இல்லை. யாரொருவரும் கல்வி கற்பதற்காக மக்தபுகளையும், மதரஸாக்களையும் கட்டுவது, நற்பேறுகள் நிறைந்ததொரு அறமாகவே எண்ணப்பட்டது. இப்படி சுல்தான்கள் முதல், உள்ளூர் நவாபுமார்கள் வரை நிறுவித்தந்த தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான கல்விக்கூடங்கள் இந்தியா முழுதும் வியாபித்திருந்தன. இதனால் தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப தொடக்கப்பள்ளியின் வளாகத்திலேயே மேற்படிப்புக்கள் நடத்தப்படுவதும், மாணவர்களின் வசதியை முன்னிட்டு இட அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வருவதும் மிக எளிதாகவே இருந்தது. இதிலெல்லாம் ஏற்றத்தாழ்வு பார்க்காததன் காரணமாக தனியொருவரின் வீட்டு முற்றத்தில் நடத்தப்படும் மேல்மட்டக் கல்வியிலும் சரி, அரசு கட்டிக்கொடுத்த ஆரம்பப்பள்ளியிலும் சரி, நேர்மையான கற்றல்/பகிர்தல் மட்டுமே எஞ்சியிருந்ததே தவிர சுயலாபமோ, பணம் செய்யும் வழியோ அல்ல. மார்க்கக் கல்வியும், உலகக்கல்வியும் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் வரலாற்றுப்பாடங்களின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்திய மண்ணின் மைந்தர்களையும் அவர்களின் சாதனைகளையும் எழுதின. இஸ்லாமானது சிந்து மாகாணம் வரையில் பரவி இருந்த இக்காலகட்டத்தில் ’ஹதீஸ்’ கலையில் சிறந்து விளங்கிய சிந்து மாகாண அறிஞர்களின் பெயர்களும் இங்கேயிருந்துதான் தங்கள் பயணத்தை ஆரம்பித்தன11.
பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவில் வட மேற்குத்திசையிலிருந்து முஸ்லிம்களின் ஆட்சி வலுப்பெற தொடங்கியது. வட இந்தியாவிலும் மத்தியிலும் தங்கள் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடங்கினர். கைப்பற்றிய ஒவ்வொரு புதிய மாகாணத்திலும் உள்ள முக்கிய நகரங்கள், கல்வி கற்பதற்கான தளங்கள் ஆயின. ஆரம்ப கட்டத்தில் முல்தானும், லாகூரும் அதன் பின் தில்லியும் வட இந்தியாவின் பிரசித்தி பெற்ற கல்வி நகரங்கள் ஆயின12.
இதே நிலை பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது. அதே நேரத்தில் மத்திய ஆசியாவையும், கொரொசான் மற்றும் ஆஃப்கானையும் தம்முடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த மங்கோலியர்கள், அங்கெல்லாம் இருந்த இஸ்லாமிய அறிஞர்களை குடும்பத்துடன் நாடு கடத்திக்கொண்டிருந்தனர். எஞ்சியவர்களை கொலை செய்தும், குடும்பங்களை அழித்தும், ஐநூறு வருடங்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் மேல் எழுதப்பட்டிருந்த நூற்களை கொளுத்தியும் அராஜகம் செய்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் தில்லியில் ஒரு மூட்டை நிறைய புத்தகங்களை சுமந்தவாறு உலமாக்களும், அவர்களின் குடும்பமும் அகதிகளாக வந்து சேர்வது என்பது சாதாரணமாகியிருந்தது. அவர்களிடமிருந்து தப்பித்த பல உலமாக்களுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இந்திய நாடுதான் பாதுகாப்பான புகலிடத்தை அளித்தது. தங்க இடம் தேடி வந்தவர்களுக்கு இந்திய இஸ்லாமிய அரசர்கள், வாழ இடமளித்து, கற்றுக்கொடுக்க கல்விக்கூடங்களை அமைத்து அவர் வழி இஸ்லாமிய ஞானத்தை இந்தியாவெங்கும் பரப்பினார்கள். இதனால் இஸ்லாமிய அறிஞர்களும் சூஃபி ஞானிகளும், உலமாக்களும் எங்கெங்கிலும் வியாபித்திருந்தனர்.
கல்வியின் மூன்று படிகள்:
இக்காலகட்டத்தில் வட இந்தியாவில் கல்வி கற்றல் என்பது மூன்று படிகளைக் கொண்டிருந்தது. அதில் முதல் படி, குழந்தைப்பருவத்திலேயே குர்’ஆனுடன் தொடர்பு ஏற்படுத்துதல். ஒவ்வொரு சமூகத்திலும் தஜ்வீத் ஆசிரியர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர். ஒரு உதாரணமாக, புகழ் பெற்ற சூஃபி ஞானி நிஜாம் அத்-தீன் அவ்லியா(1325)வின் வாழ்க்கையையே பார்க்கலாம். அவருடைய கல்வி, அவரின் சொந்த ஊரான படௌனிலிருந்து துவங்கியது. ஆரம்ப காலம் முழுதும் குர்’ஆனைப் பயில்வதில் சென்றது. அவரின் ஆசான், ஹிந்து அடிமையாய் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர். அதன் பின் இஸ்லாத்தை ஏற்று, ஏழு கிரா’அத்களிலும் குர்’ஆனை அழகுற ஓதத் தெரிந்தவர்13. இப்படிப்பட்ட உலமாக்கள் அன்று ஆசிரியர்களாக இருந்தனர்.குழந்தைகளின் குர்’ஆன் ஓதும் பயிற்சி நிறைவு பெற்றதும் குழந்தைகள் பாரசீக மொழி (அப்போதைய ஆட்சி மொழி) கற்க ஆரம்பிப்பர். அதன் மூலம் பாரசீக மொழியிலுள்ள இலக்கியங்களையும், காவியங்களையும் கற்றுவிக்கப்படுவர். ஹதீஸ்களும், அரபிய மொழியும் இதன் பின் படிப்பர். ஏற்றம் தாழ்வு இல்லாமல் எல்லா குடும்பமும் பொதுவாக அடிப்படைக் கல்விக்கு இதே வழிமுறையைப் பின்பற்றியதால், பொதுவாக இருவர் பேசிக்கொள்ளும்போது அதில் இறைமறையின் வசனங்களையும், நபிமொழியையும் மேற்கோள் காட்டிப் பேசுவது என்பது சர்வ சாதாரணமானதாக இருந்தது14.
இதற்கு அடுத்த படி, ஆழ்ந்து அரபு மொழியைப் படிப்பதும், இஸ்லாமிய சட்டங்களைப் (ஃபிக்) படிப்பதுமாக இருந்தது. எத்தனை ஆழமான கற்பித்தல் என்றால், அரபு மொழி இலக்கணத்திற்கு ’காஃபியா’, ’முஃபஸ்ஸல்’ போன்ற நூற்களையும், ’முக்ஹ்தஸர் அல் குதூரி’ மற்றும் ’மஜ்மா அல் பஹ்ரைன்’ (ஹனஃபி மத்ஹபின் சட்டத்தைப் பற்றிய நூல்) சட்டங்களுக்காக படித்தனர். இன்னும் இலக்கணத்திற்கு ’ஷர் ஜாமி’, சட்டத்திற்கு ‘ஷர் விகாயா’ போன்ற நூற்களையும் படித்தனர்15. ஒருவரை தனிஷ்மந்த்(ஞானி) என்றோ, மவ்லவி என்றோ கூறுவதற்கு இது வரையில் படித்திருந்தாலே போதுமானதாக இருந்தது. இந்தப் படியை முடித்தவர்கள், அழைப்புப் பணி செய்பவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ வாழ்வை மேற்கொண்டனர். இன்றைய கால கட்டத்தில் தென்னாசியாவில் மிகப்பெரிய படிப்பாக கருதப்படும் எட்டு வருட ’தர்ஸ் ஏ நிஜாமி’ படிப்பில் நான்காவது வருடத்தில் மட்டுமே இதனைப் படிக்க முடிகிறது16.
ஃபாதிலத் (fadhilat) என்னும் மூன்றாம் படி, அறிவியலின், மார்க்கத்தின் ஆழ்ந்த நுணுக்கங்களைப் பற்றிய படிப்பாக இருந்தது. இதில் தஃப்ஸீருக்காக கஷ்’ஹஃப், மதாரிக் போன்ற நூற்களையும், மிஷ்காத் அல் மஸாபிஹ், மஷாரிக் அல் அன்வர் போன்ற நூற்கள் ஹதீஸ்களுக்காகவும், உஸூல் அல் ஃபிக், உஸூல் அல் பஸ்தாவி போன்ற புத்தகங்கள் சட்ட நிபுணத்துவத்துக்காகவும் படித்தனர். இலக்கிய ஆய்வுகளுக்காக ’பலகா’ (balaghah) என்னும் துறையின் கீழ் வரும் எல்லா கிளை நூற்களையும் படித்தனர். இந்தப் படியை முடித்தவர், ‘ஃபாதில்’ என்றறியப்பட்டார். அன்றைய காலகட்டத்தின் வெற்றிக்கு இவையே அடிகோல் நாட்டின.
11ம் நூற்றாண்டு வரையிலும் இதே நிலை நீடித்தது. அதன் பின், 18ம் நூற்றாண்டு வரையில் உள்ள காலத்தில் தத்துவம், தர்க்கம், ஆராய்ச்சி, பகுத்தறிதல் போன்ற பாடங்களில் மிக்க ஊக்கம் அளிக்கப்பட்டு அவையும் பாடத்திட்டங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. எனினும் இதற்கு முந்திய காலத்திலும், 18ம் நூற்றாண்டு வரையிலும், தர்க்கம் சம்பந்தமான, குர்’ஆனில் அறிவியல் சம்பந்தமான போன்ற பகுத்தறிவை அதிகரிக்கும் பாடங்கள் போதிக்கப்படவில்லை. அதனை கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்த மனிதர்கள் மட்டுமே சிரமம் எடுத்துத் தனியே படித்தனர்.
ஏன் இவற்றை கற்பிக்கவில்லை..?
அப்போதைய உலமாக்களின் ஃபத்வாவில்17 (ஃபதாவா அல் தாதர்கானியா) எழுதப்பட்டிருப்பதைப் பாருங்கள்,”இல்முல் கலாம் பாடங்கள் பலவும், புதிய குழப்பங்களுக்கும், ஒற்றுமையின்மைக்கும், மார்க்கத்தில் புதுமைகளுக்கும் (ஃபித்னா) அதனால் ஈமான் குறைவதற்கும் வாய்ப்புள்ளதாலும் இந்தப்பாடங்களைப் படித்து பின்னர் தர்க்கம் புரிபவர் அறிவில் குறைந்தவர்களாக, உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய நாட்டம் இல்லாமல் வெறுமனே ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையில் மட்டுமே தர்க்கிப்பதாலும்...”
18ம் நூற்றாண்டு ஆரம்பித்த பின்னர் முதல் 1866இல் தாருல் உலூம் தியோபந்த்என்னும் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்படும் வரையில் இருந்த காலகட்டத்தில் இரண்டு மனிதர்களின் வரவு இந்திய முஸ்லிம்களின் கல்வியறிவிற்கு மிக்க பலம் சேர்த்தது. தில்லியின் ஷாஹ் வலியுல்லாஹ்வும், லக்னோவின் நிஜாமத்தீன் ஷிஹால்வியும்தான்(1748) அவர்கள். ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் ஹதீஸ் கற்றுத்தருவதையே பிரதான நோக்கமாகக் கொண்டார். ’ஸிஹாஹ் ஸித்தாஹ்’ எனப்படும் ஆறு ஹதீத் தொகுப்புக்களின்18,19 ஆசிரியராக ஷாஹ் வலியுல்லாஹ் இருந்த போதிலும், இந்தப் படிப்பின் புகழை இந்தியா முழுவதும் நிலை நாட்டியது, ஷாஹ் வலியுல்லாஹ்வின் மகனான ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்களே.
அதே நேரத்தில் லக்னோவின் ஃபரங்கி மஹாலிலிருந்துகொண்டு ஷிஹால்வி அவர்கள், ஒரு விரிவான படிப்பிற்கு அடித்தளம் இட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தப் படிப்புதான், அவரின் மறைவுக்குப் பின் ‘தர்ஸ் ஏ நிஜாமி’ என பெயர் பெற்றது. இந்தப் படிப்பில், வழிவழியாக வந்த ஹதீஸ் கல்வியை (منقولات) விடவும், பகுத்தறிவிற்கும் (معقولات), இஸ்லாமிய மார்க்க சட்டத்திற்கும் (ஃபிக்) அதிக முக்கியத்துவம் கொடுத்து, அந்தப் பாடத்திட்டத்தை உருவாக்கினார். இந்தப் பாடத்திட்டத்தை உற்று கவனித்தால் பத்து நூற்கள் பகுத்தறிவுக்கும், ஐந்து நூற்கள் தர்க்க சாஸ்திரத்துக்கும், மூன்று நூற்கள் தத்துவத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய அளவிலான தஃப்ஸீர் பாடமும், இரண்டு ஹதீஸ் பாடமும் அதில் எஞ்சியுள்ளவை. ஷாஹ் வலியுல்லாஹ்வின் பாடம் ஒரு கோடியில் என்றால், ஷிஹால்வி அவர்களின் பாடம் மறு கோடியில். அத்தனை வித்தியாசம் இரண்டிலும். மத்தியத்தை எப்படி கடைப்பிடிப்பது. இந்த கேள்விக்கான விடையாக முளைத்தது, தியோபந்த்தின் ‘தாருல் உலூம்’ பள்ளி. இரு பாடத்திட்டங்களையும் ஒன்றாக்கி, இரண்டிலும் உள்ள எல்லாப்பாடங்களையும் உள்ளடக்கி, அந்தப் படிப்பிற்கும், ‘தர்ஸ் ஏ நிஜாமி’ எனப் பெயரிட்டது. இன்றைக்கும் இந்த கல்வி நிறுவனம் ஆல் போல் தழைத்தோங்குகிறது. இதே காலகட்டத்தில் இந்தியாவின் நான்கு முனைகளிலிருந்து பற்பல பெயர்பெற்ற ஹதீஸ் கலை வல்லுனர்களையும், அறிஞர்களையும், முஃப்திக்களையும், வரலாறு தன் பக்கங்களில் இன்னும் திடமாய் பதித்து வைத்துள்ளது.
தென்னகத்தில் கல்வி:
இந்தியா முழுதும் இஸ்லாமிய வாழ்வும், அதன் வழி கல்வியும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்க, தென்னகம் மட்டும் வெறுமனே கை கட்டிக்கொண்டு இருக்குமா? வரலாற்றில் பதியப்பட்டிருப்பதைப் படியுங்கள்20.
தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.
தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரானஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க - மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புறக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.
தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.
இப்படியாக ஒரு கல்வியிற் சிறந்த வரலாற்றைக் கொண்டதுதான் இந்திய முஸ்லிம்களின் அன்றைய வாழ்வு. சுருக்கமாக சொன்னால்...புயலுக்கு முன் இருக்கும் அமைதியைப் போல கல்வியிலும், வளர்ச்சியிலும் மணித்துளிகளை தொலைத்த ஏகாந்தத்தில் இருந்தது அன்றைய இந்தியா... பிரித்தானிய அரசு உள்ளே காலடி எடுத்து வைக்கும் வரை.
‘சமூக அழிவு’ எனத் தலைப்பிடப்பட்ட ஓர் அத்தியாயம் ‘அ கேசு ஆப் இந்தியா’ என்னும் நூலில் (A case of India) உள்ளது. இதில் வில் தியூரண்ட்டு எழுதுகிறார்:
தியூரண்ட் தன் புத்தகத்தில், ““1911இல் இந்துக்களின் பிரதிநிதியான கோகலே இந்தியா முழுவதிலும் கட்டாயக் கல்விக்கான சட்ட முன்வடிவை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அது பிரித்தானியராலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது. 1916இல் பட்டேல் மீண்டும் இதேபோன்ற சட்ட முன்வடிவைக் கொண்டு வந்தபோது அதுவும் பிரித்தானியராலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது.”என்றும் எழுதியுள்ளார். இதை வைத்து அறிந்து கொள்ளுங்கள், எந்த சூழ்நிலையில் இந்தியா சிக்கித்தவித்தது என்று!!
1757இல் இருந்தே இந்தியாவை ஆள ஆரம்பித்தாலும், 1813இல்தான் இந்திய மக்களுக்கு கல்வி பெறும் சுதந்திரத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். தனிநபர் உதவி அதிகமும், அரசின் ஆமை வேக முயற்சிகளாலும் பள்ளிகூடங்கள் என்பது மிக மிக மெதுவாகவே ஆரம்பித்தன. ஒவ்வொரு கிராமத்திலும் 3, 4 பள்ளிக்கூடங்கள் இருந்த நிலை போய், பத்து கிராமங்களுக்கு ஒன்று என்பதையே மிக நிதானமாகத்தான் நடைமுறைப்படுத்தினர்.
பள்ளிக்கூடங்களில் எப்படி ஒழுங்கைப் பேணுவது, ஆசிரியர்களும் மாணாக்கர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னும் குறிப்புக்கள் (Mutual Tuition) கூட இந்திய மக்களிடம் இருந்தே காலனிய அரசு கற்றுக்கொண்டது. அதையே மேலை நாடுகளிலும் பகிர்ந்து தன் கண்டுபிடிப்பு போல பெருமைப்பட்டுக்கொண்டது.
கல்வியின் குரல்வளை நசுக்கப்படுவதை காண இயலாமல் வருந்திய முஸ்லிம் சமூகம், மௌனமாகவே இருந்தால் இனி ஷரீயத் தொடர்பான சட்டங்களைப் படித்துச் சொல்லவும் கூட யாரும் இருக்க மாட்டார்கள் என்று வெதும்பி, அன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற, படித்த சில முஸ்லிம்களை அப்போதைய கல்கத்தாவின் கவர்னர் ஜெனெரலாக இருந்த ‘வாரன் ஹேஸ்டிங்க்கை சந்திக்க வைத்தனர். விளைவு, காலனி ஆதிக்கத்தின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவின் முதன் முதல் கல்லூரி 1781இல் தொடங்கியது. ’கல்கத்தா மத்ரஸா’ அல்லது ‘மொஹம்மதன் கல்லூரி’ எனப் பெயர் பெற்ற அந்த மதரஸா, பிரித்தானிய அரசின் கீழ் அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கல்லூரி மட்டுமல்ல. அதுவரையிலும் உலகப்பாடத்தையும், மார்க்கத்தையும் ஒரு சேர தத்தம் பள்ளிகளிலும் வீட்டு முற்றங்களிலும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த உலமாக்கள், இனி ஷரீயத் சட்டங்களுக்கு மட்டுமே பதிலளிப்பார்கள் என விலக்கி வைக்கப்பட்ட22 நிகழ்வும் அந்தக் கல்லூரியின் அடித்தளத்தில்தன் நடந்தது.. மார்க்கமும், நடைமுறை வாழ்வும் வேறு வேறு என்னும் கருத்தை பிரித்தானிய அரசாங்கம் வலிந்து திணித்தது. காஜிக்களுக்கும், முஃப்திக்களுக்கும் ஷரீஅத் கோர்ட்டுக்களில் மட்டுமே பேச இடம் தரப்பட்டது. 1844இல் மதரஸாவில் படித்தவர்களுக்கு அரசு வேலைகள் நிராகரிக்கப்பட்டன. காலம் காலமாக அரசு அலுவல்களிலும், அத்தியாவசிய பத்திரங்களிலும் ஆட்சி மொழியாக இருந்த பாரசீகத்தை தடுத்து ஆங்கிலத்தை புகுத்தினர்.
ஏற்கனவே இந்திய சுதந்திர வேள்விக்காக ஆங்கிலத்தைப் புறக்கணித்துக் கொண்டிருந்த நம் சமூகத்திற்கு இந்த சூழ்ச்சி இன்னும் பெரிய நஷ்டத்தை தந்தது. மதரஸா படிப்பிற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இன்னும் அதிகமான பிளவை ஏற்படுத்தியது. ஆங்கில வழிப்பாடங்களை படிப்பவர்களுக்கும், மதரஸாவில் படிப்பவர்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் புரண்டோடியது. இதன் தாக்கம், மதரஸா பாடங்களில் உலக அறிவை மேம்படுத்தும் பாடங்கள் குறைந்து கொண்டே போனது அல்லது இல்லாமல் ஆகியது. மார்க்க சட்ட திட்டங்களும் வணக்கங்கள் மட்டுமே வாழ்வு, உலக வாழ்வுக்கு, நமக்கும் தொடர்பில்லை என்னும் நிலைக்கு மதரஸா மாணாக்கர்களும், உலமாக்களும் தள்ளப்பட்டனர். இதன் பாதிப்பால் மதரஸா பாடத்திட்டங்களிலிருந்து உலகக்கல்வி வெளியேற்றப்பட்டது.
இதே பிரச்சினையையொட்டி வட இந்தியாவெங்கும் மதரஸாக்களில் சிறு சிறு மறுமலர்ச்சிகளும்(மஸ்லக்) நாளடைவில் தோன்ற ஆரம்பித்தன. எல்லா மதரஸாக்களிலும், குறிப்பாக தியோபந்தின் தாருல் உலூமிலும் மறுமலர்ச்சியை சந்திக்கும் நேரம் வந்து விட்டிருந்தது. வேறு வேறு பெயர்களில் (தியோபந்திகள், அஹ்லே ஹதீத், பரேல்விகள், நத்விகள் இத்தியாதி...) ஆரம்பிக்கப்பட்டாலும், நோக்கம் மட்டும் பொதுவானதாகவே இருந்தது. இதே நேரத்தில்தான் 1875இல் மத்ரஸத்துல் உலூம் முஸல்மானே ஹிந்த் என்னும் பெயரைத் தாங்கியமுஹம்மதியன் ஆங்க்லோ ஓரியண்டல் கல்லூரி துவங்கப்பட்டது. பின்னாளில் அதுவே அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது(1920)23. அதுவரை பிரித்தானியப் பேரரசால் கொடிய வாழ்வை சந்திக்க இயலாமல் திணறிக்கொண்டிருந்த இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு இது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது எனலாம். இந்தக் கல்வி நிறுவனம் ஆரம்பித்த பின்னரே, இதன் மூலமே அகில இந்திய முஸ்லிம் சங்கம் உருவானது. 1940களில் இந்தச் சங்கமும், 1919இல் ஜாமியத்துல் உலமாவும் இந்திய சுதந்திரத்தீயை சரியான திசையில் செலுத்தும் மாலுமிக்களாக இருந்தனவென்றால் அது மிகையில்லை24,25. தன் கல்வி ஞானத்தாலும், பேனாவின் ஆற்றலாலும் காங்கிரஸை பிரித்தானிய அரசுக்கு எதிராக நடை போட வைத்த பெருமையும் நம் முன்னோர் வழி வந்தமௌலானா அபுல் கலாம் ஆஸாத்தையே சாரும். அவருடைய அறிவாற்றலால் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சராய் அமர்த்தப்பட்டார்26.
பிரித்தானிய அரசு ஆட்சிக்கு வரும் முன்னர் இருந்தே நம் தோல்வி துவங்கி விட்டது. வியப்பாக இருக்கிறதா? இதுவே உண்மை. பிரித்தானிய அரசுக்கு முன் நம் முன்னோர்கள் எவ்வாறு படித்தனர், எத்தகைய நூற்களை, பாடங்களை படித்தனர் என்பதை உற்று நோக்கினால் புரியும், நம் சறுக்கலுக்கான முக்கிய காரணி. ஆம்.... ‘வரலாறு’ எனும் முக்கிய பாடத்தை ஷாஹ் வலியுல்லாஹ்வின் பாடத்திட்டத்திலும் காணவில்லை, ஷிஹால்வியின் பாடத்திட்டத்திலும் காணவில்லை. இதுவே, முக்கிய காரணி. இல்லை, அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நன்றாக கற்காததால்தான் நாம் வீழ்ந்தோம் என்பவர்களிடம் சில கேள்விகள்.
இருபது வருடங்களுக்கு முன்பு வரை வல்லரசாக இருந்த ரஷ்யாவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலிடத்தில்தான் இருந்தது.
இன்று வல்லரசாய் இருக்கும் அமெரிக்காவும், தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் எங்களை முறியடிக்க எவருமிலர் என்று கர்ஜிக்கும் அமெரிக்காவும் சில வருடங்கள் முன்னர் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியிலிருந்து இன்னும் வெளியேற இயலாமல் தத்தளிக்கிறது.
இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம். அதில் உதுமானியப் பேரரசும் ஒன்று எனலாம். ஆட்சியை அதிகரிக்கவும், எல்லைகளை விஸ்தரிக்கவும் தெரிந்தவர்களுக்கு மக்களின் மனதில் நம்பிக்கையை, அதன் மூலம் மனபலத்தை வளர்க்கத் தெரியாமல் போனதும் ஒரு காரணம்.
உதாரணமாக இன்னொரு வீழ்ச்சியையும் பார்க்கலாம். நான்கு மைல்களுக்கு ஒரு கல்விக்கூடம் என்றும், தனது ஆட்சியின் கீழ் இருக்கும் முஸ்லிம் மக்களை ஹதீத்தையும், குர்’ஆனையும் படிக்க வலியுறுத்தியும், முதன் முதலில் இந்தியாவில் நூலகங்களையும் ஏற்படுத்தியும், பூரண மதுவிலக்கு சட்டத்தையும் அமுல்படுத்தியும், பிரித்தானிய அரசுக்கே ராக்கெட்டை ஏவி தனது அறிவியல் - பலத்தையும் காட்டிய மாவீரர் திப்பு சுல்தானின் கல்வித்துறையின் சாதனைகளைப்22 பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நாளைய மாணவச்செல்வங்களுக்கு திப்பு சுல்தானும் ஒரு அரசராக இருந்தார் என்று மட்டுமே தெரியுமே தவிர, நம் பாரம்பரியத்தைப் பற்றித் தெரியாது. அஷோக சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளை மனனம் செய்யும் குழந்தைகளுக்கு, நம் முஸ்லிம் / மொகலாய மன்னர்கள் யாரும் இப்படி இருக்கவில்லையே எனத்தான் தோன்றும். அந்த வடுதான், அந்த எண்ணம்தான் வளர்ந்து கொண்டே இருக்கும் நம் தோல்வியின் அஸ்திவாரம்.
கணிதத்தில் அல்ஜீப்ராவிலிருந்து, மருத்துவத்தில் கண்களுக்கான சத்திர சிகிச்சை வரை23 உலகம் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் பல தொழில்நுட்பங்களையும், பாடங்களையும், அடிப்படைகளையும் தந்த நம் முஸ்லிம் சமுதாயம், உலகிற்கு வாழும் வழி முறைகளையும், குடும்ப - சமூக பண்புகளையும், குணநலன்களையும் சேர்த்தே கற்றுத்தந்தது. ஆனால் கற்றுத்தந்த நாமே அதை மறந்து போனதும், நிராகரித்ததும், வரலாற்றின் மிக வேதனையான பக்கங்கள். எதிரில் வரும் பெண்ணின் மீது பார்வையை ஏவினார் என்பதற்காக அந்தத் தோழரின் முகத்தை தன் கையால் திசை திருப்பிய24 நபிகளாரின் வழி வந்த நாம், கோப்பையில் மதுவும், காதினில் கஜலும், கண்களுக்கு விருந்தாய் பெண்களின் நடனமும் என மாறிப்போனது, முஸ்லிம் சமுதாயத்தின் வீழ்ச்சியின் தொடக்கப்புள்ளி. ஆனால், அப்படி தறிகெட்டுப் போன ஒரு தலைமுறையின் தொடக்கம் எங்கே? நமக்களிக்கப்பட்ட வேதத்தையும், நபிகளாரின் வாழ்வையும் சரிவர கற்காதது, அறிவுக்கெட்டாத செய்கைகளின் மூலம் ஞானத்தைத் தேடியது, முடிவில் கற்பனையிலும் எட்டாத கொடுமைகளையும், குழப்பங்களையும் கொண்ட ஆட்சியாளர்களாய் வாழ்ந்தது. நபிகளாரின் வாழ்க்கை ஒரு வரலாறு. சஹாபாக்களின் வாழ்க்கை ஒரு வரலாறு. தத்தம் குணநலன்களின் மூலமே உலகின் பல்வேறு இடங்களில் இஸ்லாத்தைப் பரப்பிய அறிஞர்களின் வரலாறு... இவற்றில் எதுவுமே இல்லாமல் வாழ்ந்த தலைமுறையினாலேயே நாம் இன்று இந்த நிலையில் உள்ளோம்.
மலேசியாவின் சமகாலத்திய இஸ்லாமிய தத்துவஞானியும் சிந்தனையாளருமான சய்யித் அல் அத்தாஸ் கூறுகிறார்25,
1. (பெறுகின்ற / பெறப்பட்ட) அறிவில் உள்ள குழப்பமும், தவறுகளும், காரணிகளை உருவாக்குவது;
2. சமூகத்தில் ‘அதப்’ / நடத்தை தொலைந்து போவது; மேற்கண்ட (1) மற்றும் (2) காரணங்களால்,
3. முஸ்லிம் சமுதாயத்திற்கு சற்றும் பொருந்தாத, தலைமைப் பதவிக்கு தகுதி இல்லாத, தார்மீக அறிவார்ந்த மற்றும் ஆன்மீகம் தரத்தைப் பெறாத ‘தலைவர்களின்’ எழுச்சியும், அவர்களின் ஆட்சியால் தொடர்ந்து (1) முதலாம் காரணியை நிலை நிறுத்தச் செய்தலும்.
மேலே கண்ட இந்த வேர்கள்தான் நம்முடைய இந்த நிலைக்கு ஒரு தீய வட்டத்திலேயே உழன்று கொண்டிருக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து கொண்டிருக்கும் காரணிகள். இந்த நச்சு வட்டம் உடைத்து இந்த கல்லறை பிரச்சினைக்கு தீர்வாக பொருட்டு, நாம் முதலில் இழந்த அதப்பை, வரலாற்றை திரும்ப கொண்டு வர வேண்டும். ஏனெனில் யாருக்கு கல்வி தரப்படுகிறதோ, யார் ஞானத்தாகத்தில் இருக்கிறார்களோ அவர்களிடம் இந்த நன்னடத்தையும், அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் ஆற்றிய அரும் பெரும் சாதனைகளின் அறிவும் இருத்தல் வேண்டும். அதுவே வெற்றியின் அடிகோலாகும்.
ஒரு சமயம் ஈராக்கில் உள்ள பஸ்ரா நகரின் கல்வியாளர்கள் நிறைந்ததொரு ஒரு சபையில் அரபியொருவர், ஒரு சிறுவனைப் பார்த்து அவரின் நண்பரிடம் கூறினார், ”நானும் என் குழந்தைகளுக்காக பெரும் பெரும் செலவெல்லாம் செய்து நல்ல நல்ல 'மு'அத்தபீன்'களைக்26 கொண்டு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்...என்றாலும் இந்த சிறுவனைப் போல அவர்களின் குணநலன்கள் இல்லை என்று. யார் அந்தச்சிறுவர்? பின்னாளில் ’ஷேக்குல் இஸ்லாம்’ என்றும், ’அஹ்லஸ் ஸுன்னாவின் இமாம்’ என்றும் நற்புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞரும், தத்துவ ஞானியுமான இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்27 (ரஹி) அவர்களே அந்தச் சிறுவர். எத்தனை ஒரு சீரான பாதை என்று பாருங்கள். நன்னடத்தையுள்ள ஒரு சிறுவன், கல்வியாளர்களுடன் தொடர்பில் இருப்பவன் பின்னாளில் விவேகமும், அதனால் புகழும் பெறுகிறார் என்றால், நடுவில் எந்தத் தடையாவது உள்ளதா? இந்த எளிய உதாரணம் போதாதா?
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் மட்டுமல்ல, இறுதி இறைத் தூதர் மாநபி (ஸல்) அவர்கள், தாம் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட காரணமே நற்குணங்களை சீரமைக்கவே என்று கூறியுள்ளார்28. மாநபியைப் படைத்து நம்மிடையே அனுப்பி வைத்த ஏக இறைவனும் நபிகளாரை, நற்குணங்களில் உன்னத நிலையை உடையவர் என்கிறான்29. ஏனைய நபிகளைக் குறிப்பிடுகையில் அல்லாஹ், அவர் வாய்மையாளராக இருந்தார், நேர்மையாளராக இருந்தார் என்று குறிப்பிடும் வேளையில் இவ்வுலகின் கடைசி மனிதர் வரைக்கும் பின்பற்றக்கொடுத்த நபிகள் நாயகத்தை(ஸல்), அல்லாஹ் நற்குணங்களைக் கொண்ட உன்னதமானவர் என்கிறான். இதுவே நமக்கு குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள பாடமாகும். இபாதத்தில் மட்டுமல்லாது வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என நம் இறைவன் நமக்கு சொல்வதாகும். நம் சமூகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தற்போது வேரோடியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் முழுத்தீர்வு, இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நன்னடத்தையை கற்பிப்பதும், வரலாற்றை எத்தி வைப்பதுவும் மட்டுமே...!
பத்தே பத்து விதிகள். இன்ஷா அல்லாஹ் இவை பின்பற்றப்பட்டால் நம் தமிழக சமூகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகில உலக இஸ்லாமிய சமூகமும் எழுந்து நிற்க இதுவே அடித்தளமாகும். எனினும், இவற்றில், கல்விப்பணிக்கான புரட்சியை மட்டும் எப்படி நம் தமிழக சமூகம் நடைமுறைப்படுத்துவது, அதற்கான படிகள், வழிகள், திட்டங்கள் யாவை, போன்ற தலைப்புக்களை மட்டும் இன்ஷா அல்லாஹ் இந்த ஆய்வுக் கட்டுரை மூலம் நாம் தெளிவடைய முயல்வோம் இன்ஷா அல்லாஹ்.
தன் குழந்தையின் கண் பார்வை திரும்பி வர இறைவன் மட்டுமே துணை புரிய முடியும் என்று நம்பி, அந்த நம்பிக்கையை மெய்ப்பித்தும் காட்டிய தாய்களைக் கண்டது இந்த மார்க்கம். இஸ்லாமைப் புரிந்து இஸ்லாத்தை தழுவுவதே தன் மஹராகும் என அந்தச் சூழ்நிலையிலும் இறைவாக்கை எத்தி வைத்த தாய்மார்களைக் கொண்டது இந்த மார்க்கம். முழு அரபையே ஆண்டு கொண்டிருக்கும் இனிய மார்க்கத்தின் தலைவர் தன் தந்தைதான் என்றாலும், செல்வத்தின் வாசனையையோ, அதிகாரத்தின் சுவையையோ கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காத பெண் மக்களை வென்றெடுத்தது இந்த மார்க்கம். இறைத்தூதரே தன் கணவன் என்ற போதிலும் தன் மீதான அவதூறுக்கு மமதையில் பதில் தராமல், பொறுமையைக் கைக்கொண்டு இறைவன் மூலமே சத்தியத்தை வெளிக் கொண்டு வந்த தாயின் மார்க்கம், இந்த மார்க்கம். இன்று, அடிமைச்சங்கிலிகளை உடைத்தெறிந்து எமனின் மக்களை துனிசியாவின் ‘மல்லிகை மணத்தினை’ நோக்கித் திருப்பி, அதன் மூலம் நாட்டில் நல்லதொரு மாற்றத்திற்கு வித்திட்ட சகோதரி தவக்குல் கர்மன்32 வரைக்கும், வேகமும் விவேகமும் முன்மாதிரியான குணநலன்களையும் கொண்ட பெண்களை உந்துசக்திக்களாக தன் வழியெங்கும் சேமித்து வந்த மார்க்கம், இந்த மார்க்கம். எனவே மேலே கண்ட திட்டங்களை செயல் வடிவத்தில் கொண்டு வருவதற்கு முழு முதற்காரணிகளாக நிற்கக்கூடியவர்கள் நம் சமூகப் பெண்களே.
இதே போன்றொரு ஒரு இக்கட்டான சூழ்நிலை 18ஆம் நூற்றாண்டில், இன்றைய நைஜீரிய நிலப்பரப்பில் ஏற்பட்டபோது, சோர்ந்து போகாமல், துவளாமல், நம்மால் என்ன செய்ய இயலும் என்று விட்டு விடாமல், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, சரியான திட்டமிடலுடன் தன்னந்தனிப்பெண்ணாக ஒரு புரட்சியை ஏற்படுத்திய நானா அஸ்மா33வின் பாதையே நம் சமூகப்பெண்களுக்குமான பாதை. இதே பாதையின் இன்னொரு வடிவத்தை சமகாலத்திய ஃபர்ஹத் ஹாஷ்மி34என்னும் பாகிஸ்தானிய சகோதரியும், கனடாவில் இருந்துகொண்டு ஆங்கிலம் / உருது இஸ்லாமியப் பாடங்கள் மூலம் பல பெண்களை மார்க்கத்தின் பிடியில் மீண்டும் கொண்டு வந்துள்ளார்... இன்னும் வெற்றியின் பாதையிலேயே பயணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எனவே எல்லா சமூகங்களிலும் இருக்கும் வினையூக்கிகளான பெண்களை, அவர்களின் ஆற்றலை சரி வர கையாண்டாலே இன்ஷா அல்லாஹ் நம் சமூகம் முன்னேற்றப்பாதையின் பல படிகளைத் தாண்டியிருக்கும், இன்ஷா அல்லாஹ்.
ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படவேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு மார்க்க அறிவு தெளிவாக போதிக்கப்பட வேண்டும். இது தான் அஸ்மாவின் அடிப்படை எண்ணமாக இருந்தது.35
இதனை நாம் செயல்படுத்துவது எப்படி?
மிகச் சுலபம். இதை மூன்று பகுதியாக பிரிப்போம். முதல் பகுதி பெண்களுக்கானது.
சில பெரு நகரங்களில் ஏற்கனவே நடந்துகொண்டிருந்தாலும், பல பெண்களுக்கு இதைப் பற்றிய ஞானம் இல்லை. அப்படியே தெரிய வந்தாலும், குடும்பச்சுமைகள் காரணமாக போக இயல்வதில்லை. குர்ஆன் ஹதீத் பாடங்கள் மட்டுமன்றி, நாம் இருந்து கொண்டிருக்கும் இந்த அவசரகால நிலையைப் பற்றி, வீரமும், வெற்றியும், சாந்தியும் பரவியிருந்த நம் வரலாற்றைப்பற்றி, இன்றைய மக்களின் இத்தகைய நிலைக்கு இஸ்லாமிய ஷரீஅத் எத்தனை உதவியாக இருக்கும் என்பதைப் பற்றி, குடும்பத்திலிருந்து சமூகம் வரை பெண்களால் எப்படி இஸ்லாத்தை செயல்கள் மூலம் காட்டி வெற்றியடைய முடியும் என்பது வரை என ஒரு விரிந்த பாடத்திட்டமாக இருத்தல் வேண்டும். ஏன்? ஏனெனில் இந்தக் கல்வியானது, இன்றைய சமுதாயத்தையும், இனி வரும் சமுதாயத்தையும் மீண்டும் ஒரு சகாப்தத்தை படைப்பவர்களாய் மாற்ற வேண்டிய கல்வி. சிறு சிறு குழுவாக ஆரம்பித்து இதை இயக்கங்கள் தாண்டிய ஒரு செயலாக கொண்டு போக வேண்டும். பொதுவாக ஒரு இடத்தையோ அல்லது ஒரு வீட்டையோ தேர்ந்தெடுத்து இதனைச் செய்யலாம். பெங்களூருவில் பல வசதியான வீடுகளின் பேஸ்மெண்ட்டை / அடித்தளத்தை இந்த மாதிரி வகுப்புக்களுக்காக உபயோகிக்கின்றனர். வாகன வசதியில்லாத பெண்களுக்கு மற்ற பெண்கள் உதவுகிறார்கள். பக்கத்திலிருக்கும் மஸ்ஜிதில் இருந்து இமாமோ / ஹஜரத்தோ வந்து தஜ்வீத் சொல்லித் தருவது, தேர்வுகள் வைப்பது என இணைந்து செய்கிறார்கள்.
இன்னுமொரு சாரார் அலுவலக வேலையில் இருக்கும் பெண்கள். இவர்களால் வாரநாட்களில் நடக்கும் கூட்டங்களுக்கோ / வகுப்புக்களுக்கோ போக முடிவதில்லை. இங்கே நாம் சகோதரி.ஃபர்ஹத் ஹாஷ்மி போல் தொழிநுட்பத்தை உபயோகிக்கலாம். வார நாட்களில் நடக்கும் வகுப்புக்களை (இன்றுதான் மடிக்கணிணியில் கூட ஏகப்பட்ட தொழில்நுட்பம் வந்து விட்டதே) பதிவு செய்து ஒலி / ஒளி தொகுப்புக்களாக அனுப்பலாம். வலைத்தளத்தில் பதிவேற்றி இணைப்பு கொடுக்கலாம். இப்படி தொழில்நுட்பத்தை நமக்கான விதத்தில் உபயோகிப்பதுவும் ஒரு வெற்றிப்படியே..!
இதன் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் குடும்பத்தில் உள்ள ஆண் நபர்கள். கூட்டுக்குடும்பமோ, தனிக்குடும்பமோ, குடும்பத்தின் பொறுப்பான ஆண்கள் இதற்கான தேவையறிந்து, இதனை எளிதாக்கித் தர வேண்டும். எத்தனை பெரிய பள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகள் படித்தாலும், வீட்டில் தாய் சொல்லித்தரும் விதத்திலேயே அதிக புரிதலும் ஒட்டுதலும் ஏற்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் தாய்மார்கள், கல்வியறிவிலும், மார்க்க அறிவிலும் சிறந்து விளங்கும்போது கற்றல் என்பது இன்னும் இன்னும் மேம்படுகிறது.
முஸ்லிம் நிர்வாகத்தினரால் நிறுவப்பட்டு நல்முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எந்தக் கல்வி நிறுவனங்களிலும் கூட பெண்களுக்கு வசதியைத் தரக்கூடிய, அவர்களின் நிலையறிந்து தேவையறிந்து உதவிடக்கூடிய சாத்தியங்களை காண முடிவதில்லை. இது போல பல பல குடும்பங்களில் இன்றும் பெண்களை சீக்கிரமே மணமுடித்துக் கொடுத்து விடுகின்றனர். அல்லது, கணவன் வீட்டில் படித்துக்கொள்ளலாம் என முடக்கி விடுகின்றனர். எல்லோருக்கும் இந்நிலை இல்லை, அல்ஹம்துலில்லாஹ் என்றாலும், இத்தகைய சூழ்நிலைகளால் பட்டமோ, மேல்படிப்போ பெறும் ஆர்வம் இருக்கும் எத்தனை எத்தனை பெண்களின் நிலை பாழாகிறது?? போர்களில் தாதிக்களாக சேவையாற்றி வந்த சமூகத்தில் இன்று மருத்துவ தேவைக்காக இரத்தம் பரிசீலனை செய்யும் இடங்களிலோ, அல்ட்ராசவுண்டு ஸ்கேனிங் செண்ட்டர்களிலோ ஒரு முஸ்லிம் பெண்ணைக்கூட காண முடியவில்லை.
இன்னொரு முக்கிய கேள்வியும் இங்கே உள்ளது. நம் சமூகப்பெண்களின் தேவையறிந்து கல்விச்சேவையை எத்தனை பேர் ஆற்றுகிறோம்? ஏன் நம் சமூகப்பெண்களுக்காக மட்டுமே என்று இதுவரை ஒரு டுட்டோரியல் கல்லூரி / மாலை நேர பள்ளி / திறந்தவெளி பல்கலைக்கழகம் (இல்லையென்றால் ஒரு பள்ளிக்கூடம் மட்டுமே கூட போதும்) தொடங்கப்படவில்லை..? அகில இந்திய அளவில் சென்ஸஸ் எடுக்கும்போது கல்வியறிவு பெற்ற கிறித்தவ பெண்கள் 76.19 விகிதமும், சீக்கியப் பெண்கள் 63.09 விகிதமும் உள்ளனர். ஆனால் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவு மட்டும் 50.9 மட்டுமே39. இது, இந்தியாவில் கல்வியறிவு பெற்றுள்ள அனைத்து பெண்களின் விழுக்காடை விடக் குறைவாகும்(53.67). அதிலும் 2011 நிலவரப்படி தேசிய அளவில், உயர்நிலைக்கல்வியை 10 சதவிகிதத்தை விடக் குறைவான பெண்களே நம் சமூகத்தில் முடித்துள்ளனர்40. என்ன ஓர் இழிநிலை... இதற்கு உபாயம்தான் என்ன??
முதல் வழி ‘டுட்டோரியல்’. வீதிக்கொரு பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு வீதியிலும் டுட்டோரியல்கள் உள்ளன. இவற்றின் மூலம், எதோ ஒரு காரணத்தினால் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளான மாணவ மாணவிகள், அல்லது, தங்கள் பள்ளி மூலம் இவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என ‘பத்திரம்’ தரப்பட்ட பலர், இந்த டுட்டோரியல்கள் மூலம் 10வது, 12வது இன்னும் பல பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். நாமும், நம் சமூகப்பெண்களுக்காக ஒரு டுட்டோரியல் ஆரம்பிக்கலாம். அந்த டுட்டோரியலுக்கென்று ஒரு இடமோ, பொதுவான ஒரு பள்ளியிலோ, மகளிருக்கென்று தனி இடம் தரும் பள்ளிவாசல்களிலோ அல்லது இஸ்லாமிய பள்ளிக்கூடங்களிலோ மாலை நேரம் / விடுமுறை நாட்களிலோ இப்படி பள்ளிக்கு சென்று படிக்க இயலாத பெண்களுக்கு பொதுத்தேர்வுக்கான கல்வியை, அந்த டுட்டோரியலின் ஆசிரியர்கள் மூலம் அளிக்கலாம்.
இன்னொரு வழி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருப்பது போல குழுக்கள் தொடங்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் தத்தம் இடம் / மொஹல்லா / ஊரைச் சார்ந்த குடும்பங்களில் உள்ள வயது வந்த பெண்கள், தாய்மார்கள், படிக்கும் ஆர்வம் இருந்தும் பல காரணங்களால படிப்பை தொடர இயலாமல் போன சிறுமிகள் முதல் பெரியவர் வரையுள்ள முஸ்லிம் பெண்களைக் கணக்கெடுத்து ஒரு சிலரை மட்டும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான கல்வியை கற்றுத்தர வேண்டும். ஒரு இயக்கத்தின் கீழோ / அறக்கட்டளையின் கீழோ இத்தகைய குழுக்கள் நடக்கும்போது பாடத்திட்டங்கள், தேவையான நூற்கள், தகவல்கள், கையேடுகள் என எல்லாவற்றையும் சேகரிக்கவோ, அச்சடித்து வைத்துக்கொள்ளவோ இயலும். அதைக் கொண்டு அடிப்படை முதல் உயர்நிலை வரையிலான கல்வியை தர இயலும். இதே குழுக்கள் பெண்களால் செய்யக்கூடிய அரசு வேலைகளைப் பற்றிய தகவல்களையும் திரட்டி வைத்து அதிலும் பெண்களை இணைய வைக்க வேண்டும். அரசுப் பணிகள், உதவிகள், நலத்திட்டங்கள் பற்றிய எல்லா திசைகளையும் கவனித்து, தகவல்களைத் திரட்டவும், தேவைப்படுவோருக்கு அதை சேர்ப்பிக்கவும், அதை அவர்களுக்கு பெற்றுத் தருவதில் உதவியும் செய்ய வேண்டும். நன்கு கற்ற பெண்கள், மார்க்கம் தெரிந்த பெண்கள், அனுபவத்தையே முதலீடாகக் கொண்ட பெண்கள் என குழுவின் நிர்வாகத்தில் தேர்ந்த பெண்களை இணைக்கும்போது ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நானா அஸ்மாவுக்கு இணைதானே....
இன்னொரு முக்கியமான வழி, நம் நாட்டில் காணக்கிடைக்காத வழி, மசூதிகளை இஸ்லாமியக் குடும்பங்களின் நிர்வாகக் கேந்திரமாகவும், கல்விக்களமாகவும் ஆக்குவது. இன்னும் பல மசூதிகளில் பெண்களுக்கு என்று தனியறையே இல்லை. மஸ்ஜிதுன் நபவியை முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் எழுப்பும்போது அதை மூன்று இடங்களாக பிரித்திருந்தார். தொழும் இடம், தங்கும் இடம், மக்தப்(ஆரம்பப் பாடசாலை). இஸ்லாத்திற்காக கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலிலேயே பெண்களுக்கும் வந்து போக, தொழ அனுமதி இருந்தது. ஆனால் 1400 வருடங்களாகியும் சில இடங்களில் இது இன்னமும் நிறைவேறாத கனவாகவே உள்ளது. இதை நாம் மாற்ற முன்வர வேண்டும். ஒவ்வொரு மஸ்ஜிதிலும் பெண்களுக்கென ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தந்த மஸ்ஜித் இருக்கும் இடத்தில் உள்ள இஸ்லாமியக் குடும்பங்களின் பெண்களுக்கான மார்க்கக் கல்விக்கும், நடைமுறை வாழ்விற்குத் தேவையான அளவு உலகக் கல்விக்கும் வசதிகள் செய்து தர, அரசின் திட்டங்கள், உதவிகள், சமுதாய அறிவிப்புகள் போன்ற பலதையும் பகிர, மார்க்க விஷயத்தில் எந்த ஐயமும் இருந்தால் உடனே களையப்படவும், அதற்கான சரியான தளமாகவும் மசூதி அமையவேண்டும். இதன் மூலம் பெண்களுடைய மற்றும் குழந்தைச் செல்வங்களுடைய ஆர்வத்தையும், மதிப்பையும், அறிவுத்தாகத்தையும் கவரும் இடமாக அந்த மசூதி மாறுகிறது. வாழ்வின் அடுத்த அடியை எடுப்பதற்கு முன் மசூதியில் என்ன தீர்வு சொல்வார்கள், குர்’ஆன் -சுன்னாவிற்கு முரணாக உள்ளதா இல்லையா என மார்க்கத்தை பற்றிப் பிடிப்பதற்கான அந்த நிலைகள் படிப்படியாக வந்து சேரும். யாரொருவர் தான் சார்ந்திருக்கும் மார்க்கத்தைப் பற்றி, தன் சமுதாயத்தின் வரலாறு பற்றி, தான் போக வேண்டிய பாதை பற்றி தெளிவாக இருக்கிறாரோ பிறகு அங்கே முன்னேற்றத்திற்கு தடை ஏது????
உண்மையிலேயே பெண்களின் கல்வியைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை என்பது மிக மிக அபாயகரமான நிலை. ஒரு சமூகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் பெண்களை, பெண்களின் அறிவை, ஆற்றலைப் பொறுத்தே இருக்கிறது என்பதை நாம் நினைவிலிருந்து அகற்றக்கூடாது. ஒரு சமயம் கலந்து கொண்ட ஒரு இஸ்லாமிய வகுப்பில், பாடம் நடத்திய மதீனாவின் கற்றறிந்த இமாமிடம் ஒரு மாணவர் கேட்டார்,”எனக்கு திருமணமாகி, குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. எப்போதிலிருந்து அந்தக் குழந்தைக்கு கல்வி கற்பிக்க ஆரம்பிக்கலாம்??”. அதற்கு அந்த இமாம் பதிலளித்தார், “மன்னிக்கவும், உங்கள் குழந்தைக்கான கல்வியின் ஆரம்பம் உங்களுக்கான மனைவியைத்தேடுவதில் இருந்து ஆரம்பிக்கின்றது. நீங்கள் தாமதித்து விட்டீர்கள்” என. ஆம், இஸ்லாத்தில் கல்வி என்பது அந்தக் குழந்தைக்கான தாயை சரியாக தேர்ந்தெடுப்பதில் இருந்து ஆரம்பிக்கின்றது. கருவுற்ற காலத்திலிருந்து அந்தத்தாயின் வழியாக குழந்தைக்கும் உலக அறிவும், மார்க்க அறிவும் செல்கிறது. தாய்க்கே சரியான புரிதல், கல்வி இல்லாவிட்டால் அந்தக் குழந்தையின் நிலை??
நம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இரண்டு விதிகள் மிக மிக இன்றியமையாதவை. ஒன்று, பெண்களுக்கான கல்வி. இரண்டாவது, நம் சமூகத்திற்கான பாடத்திட்டம் ஒரு போதும் மாற்று மத பாடத்திட்டங்களுடன் ஒத்துப் போகாது என்பதில் தெளிவாக இருப்பது. நம்முடைய திட்டங்கள் அனைத்தும் குர்’ஆன் மற்றும் நபிவழியின் மூலமே அமைய வேண்டும். முதல் விதிக்கான யோசனைகளை மேலே பார்த்தோம். இரண்டாவது விதிக்கான யோசனைகளையும் இந்தக் கட்டுரையில் படிப்போம் இன்ஷா அல்லாஹ்.
சுருங்கச் சொன்னால், ”ஒரு ஆணுக்கு கல்வி என்பது. அந்த ஆணோடு முடிந்து விடும். ஆனால் ஒரு பெண்ணின் கல்வி, ஒரு குடும்பத்திற்கே கல்வி. ஒரு குடும்பத்திற்கு தரப்படும் கல்வி, ஒரு சமுதாயத்துக்கே தரப்படும் கல்வி41”என்னும் கூற்றை நினைவில் வைத்து, இப்படியான மாற்று வழிகளை அவசியம் கைக்கொள்ள வேண்டும். படித்த ஒரு தகவலில் இப்படி எழுதப்பட்டிருந்தது. Plan -A தோற்றுப்போனால் என்ன, ஆங்கில எழுத்துக்களில் இன்னும் இருபத்தி ஐந்து எழுத்துக்கள் பாக்கி உள்ளனவே... :)
18, நவம்பர் 1949இல் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி IV பிரிவு 45இன் கீழ், “அரசு தன் முழுப் பொறுப்பிலும் செலவிலும் கட்டாய, கட்டணமில்லாக் கல்வியை 10 ஆண்டுகளுக்குள் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரவேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.
என்ன, படித்ததும் எந்த நாட்டில் இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா. இந்திய நாட்டின் சட்டமே இது. இதைத்தான் ஹாஸ்யம் என்றேன். ஏன்? கீழே அதன் பின் நடந்தவற்றைப் படித்தாலே புரிந்து விடும்.
இந்திய உச்சநீதிமன்றம், 1993இல் “பிரிவு 45 கல்வி பெறுவதைக் குழந்தைகளின் அடிப்படை உரிமையாகக் கொள்ள வேண்டும்” என மிகத் தெளிவாகக் கூறியது.
2002ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 86ஆவது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு, பிரிவு 21A உருவாக்கப்பட்டது. இப்பிரிவு, “அரசு தான் இயற்றும் சட்டம் மூலம் எவ்வகையில் தர விரும்புகிறதோ அவ்வகையில் 6 முதல் 14 வயது குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வியைத் தரவேண்டும்” எனக் கூறியது. மேலும் பிரிவு 51Aஇல் (k) சேர்க்கப்பட்டது. இதன் மூலம் “குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டிய கடமை பெற்றோர்க்கு உண்டு” எனக் கூறப்பட்டது.
கவனிக்க இதுவரை அரசுகளுக்கு மட்டுமே இருந்த, இருக்க வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கு மாற்றப்பட்டதன் மூலம் அரசு தன் பொறுப்பைக் கைகழுவிவிட்டது. இதைத் தொடர்ந்து இயற்றப்பட்ட குழந்தைகளின் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன் உள்நோக்கத்தையும் பார்த்து விடலாம்.
• பலவகைப் பள்ளி முறை தொடரும் என்கிறது.
• தனியார் – அரசு கூட்டு உண்டு.
• தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது எந்தச் சமூகக் கட்டுப்பாடும் கிடையாது.
• தனியார் பள்ளியில் அரசு செலவில் மாணவர் சேர்க்கை (25%). இதன் மூலம் படிப்படியாக அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அரசுப் பள்ளிகளை மூடும் மறைமுகத் திட்டம் போன்றவை இச்சட்டத்தின் ஆபத்து.
சென்னையில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் 30 மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதே போன்று மூடப்படும் அச்சுறுத்தலில் தற்போது பல அரசுப் பள்ளிகள் உள்ளன என்பது வருத்தமான செய்தி. கர்நாடக மாநிலத்தில் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு ஓர் ஆண்டு கழித்து கடந்த கல்வி ஆண்டில் 3000 அரசுப் பள்ளிகளை மூட அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது இதற்கு ஓர் ஆதாரம்42.
இத்தகைய மக்கள் கல்விக்கு எதிரான கல்வி உரிமைச்சட்டம்-2009 கல்வி உரிமையை வழங்காது. மாறாக, குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை மறுக்கவே செய்கிறது. இதனால் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்துத் தனியார் பள்ளிகளை ஊக்குவித்து, கல்வி வழங்கும் தன் பொறுப்பிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொள்ளும் நயவஞ்சகச் செயல் செவ்வனே நடைபெறுகிறது. ஆனால் நம் சமூகத்தில் பார்த்தீர்களானால், சமுதாயத்தலைவர்களிலிருந்து, இஸ்லாமிய பள்ளி நிறுவனங்களிலிருந்து, ஊடகங்களிலிருந்து, பள்ளிவாசல் நோட்டீஸ் போர்டு வரையிலும் இதைப் பற்றி யாரும் பேசவில்லை. ஏன்? இதுதான் நம் சமூகத்தின் நிலை. ஒவ்வொரு துறையிலும் நுண்ணிய ஆய்வையும், தேடலையும் மேற்கொள்ளாததாலும், ஊடகங்களையே பெரும்பாலும் நம்பியிருப்பதாலும் வந்த நிலை. எத்தனை எத்தனை குடும்பங்கள் இன்று கல்விச்சூளைகளில் கேட்கும் பணத்தை தர இயலாமல் மடிகின்றன. எத்தனை லட்சம் குழந்தைகள் இதனால செங்கல் சுமக்கவும், பொதி சுமக்கவும் தள்ளப்பட்டுள்ளனர். ஏன் இதை நாம் வலியுறுத்தவில்லை? இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை? ஏன்? ஏன்?? ஏன்???
இத்தகைய சட்டம் வந்திருந்தால் மட்டும் நம் சமூகம் முன்னேறி இருக்குமா?
தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரானஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க - மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புறக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.
தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.
இப்படியாக ஒரு கல்வியிற் சிறந்த வரலாற்றைக் கொண்டதுதான் இந்திய முஸ்லிம்களின் அன்றைய வாழ்வு. சுருக்கமாக சொன்னால்...புயலுக்கு முன் இருக்கும் அமைதியைப் போல கல்வியிலும், வளர்ச்சியிலும் மணித்துளிகளை தொலைத்த ஏகாந்தத்தில் இருந்தது அன்றைய இந்தியா... பிரித்தானிய அரசு உள்ளே காலடி எடுத்து வைக்கும் வரை.
பிரித்தானிய அரசின் கீழ் இந்திய மக்களின் கல்வி:
இந்தப் பகுதிக்கு செல்லும் முன் ஒரு உண்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில் பிரித்தானிய அரசு வருவதற்கு முன், மேற்கண்ட பாராவில் படித்தது போல, ஒரு ஒழுங்குமுறையான கல்வியும், நல்வாழ்வும் எல்லா மக்களிடமும் இருந்தது. இந்து மக்களும் சரி, முஸ்லிம் சமுதாயமும் சரி, கல்வியிலும், வளர்ச்சியிலும் ஐரோப்பிய நாடுகளை மிஞ்சிக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. ஆனால் வணிகர்களாய் வந்து அரசணையில் ஏறிய பிரித்தானியர்கள், இந்தியாவை முன்னமிருந்தே நன்கு உற்று நோக்கியதன் விளைவு, அவர்களின் அராஜக ஆட்சியின் முதல் படியிலேயே தெரிந்தது. என்ன அது? இந்தியாவின் கல்வியையும், நல்வாழ்வையும் திட்டமிட்டு அழிப்பது. ஆட்சியில் அமர்ந்த நொடிப்பொழுதுகளில் அதை அமலாக்கவும் செய்தனர்.‘சமூக அழிவு’ எனத் தலைப்பிடப்பட்ட ஓர் அத்தியாயம் ‘அ கேசு ஆப் இந்தியா’ என்னும் நூலில் (A case of India) உள்ளது. இதில் வில் தியூரண்ட்டு எழுதுகிறார்:
“பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபோது ஊரகச் (கிராம) சமுதாயத்தினரால் நடத்தப்பட்ட ‘சமுதாயப் பள்ளிகள்’ என்ற அமைப்பு இந்தியா முழுவதும் இருந்தது. கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த ஊரகச் சமுதாயங்களை அழித்தனர்!”இதற்குப் பின் நடந்தது இன்னமும் திகைப்பூட்டக்கூடியது. தியூரண்ட்டு கூறுகிறார்21:
“கல்வியை ஊக்குவிப்பதற்கு மாறாக அரசு மது அருந்துவதை ஊக்குவித்தது. பிரித்தானியர் வந்தபோது இந்தியா போதையில் அமிழாத நாடாக இருந்தது.”இப்படியாக ஆரம்பமானது பிரித்தானிய அரசின் துவம்சம். இது இத்தோடு நிற்கவில்லை. கல்விக்காக எடுக்கப்பட்ட எல்லா சிரத்தைகளையும், கவனத்துடன் அந்த அரசு அழித்தது.
”தேசியக் காங்கிரசு, தொழில்துறை – சமூக மாநாடுகள், மாகாண மாநாடுகள், பிரம்ம சமாசம், ஆரிய சமாசம், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் என அனைவரின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடைகள் மூலம், மது விற்பனை போல ஓபியமும் அரசினால் மட்டுமே விற்கப்படுகிறது”
தியூரண்ட் தன் புத்தகத்தில், ““1911இல் இந்துக்களின் பிரதிநிதியான கோகலே இந்தியா முழுவதிலும் கட்டாயக் கல்விக்கான சட்ட முன்வடிவை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அது பிரித்தானியராலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது. 1916இல் பட்டேல் மீண்டும் இதேபோன்ற சட்ட முன்வடிவைக் கொண்டு வந்தபோது அதுவும் பிரித்தானியராலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது.”என்றும் எழுதியுள்ளார். இதை வைத்து அறிந்து கொள்ளுங்கள், எந்த சூழ்நிலையில் இந்தியா சிக்கித்தவித்தது என்று!!
1757இல் இருந்தே இந்தியாவை ஆள ஆரம்பித்தாலும், 1813இல்தான் இந்திய மக்களுக்கு கல்வி பெறும் சுதந்திரத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். தனிநபர் உதவி அதிகமும், அரசின் ஆமை வேக முயற்சிகளாலும் பள்ளிகூடங்கள் என்பது மிக மிக மெதுவாகவே ஆரம்பித்தன. ஒவ்வொரு கிராமத்திலும் 3, 4 பள்ளிக்கூடங்கள் இருந்த நிலை போய், பத்து கிராமங்களுக்கு ஒன்று என்பதையே மிக நிதானமாகத்தான் நடைமுறைப்படுத்தினர்.
பள்ளிக்கூடங்களில் எப்படி ஒழுங்கைப் பேணுவது, ஆசிரியர்களும் மாணாக்கர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னும் குறிப்புக்கள் (Mutual Tuition) கூட இந்திய மக்களிடம் இருந்தே காலனிய அரசு கற்றுக்கொண்டது. அதையே மேலை நாடுகளிலும் பகிர்ந்து தன் கண்டுபிடிப்பு போல பெருமைப்பட்டுக்கொண்டது.
கல்வியின் குரல்வளை நசுக்கப்படுவதை காண இயலாமல் வருந்திய முஸ்லிம் சமூகம், மௌனமாகவே இருந்தால் இனி ஷரீயத் தொடர்பான சட்டங்களைப் படித்துச் சொல்லவும் கூட யாரும் இருக்க மாட்டார்கள் என்று வெதும்பி, அன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற, படித்த சில முஸ்லிம்களை அப்போதைய கல்கத்தாவின் கவர்னர் ஜெனெரலாக இருந்த ‘வாரன் ஹேஸ்டிங்க்கை சந்திக்க வைத்தனர். விளைவு, காலனி ஆதிக்கத்தின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவின் முதன் முதல் கல்லூரி 1781இல் தொடங்கியது. ’கல்கத்தா மத்ரஸா’ அல்லது ‘மொஹம்மதன் கல்லூரி’ எனப் பெயர் பெற்ற அந்த மதரஸா, பிரித்தானிய அரசின் கீழ் அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கல்லூரி மட்டுமல்ல. அதுவரையிலும் உலகப்பாடத்தையும், மார்க்கத்தையும் ஒரு சேர தத்தம் பள்ளிகளிலும் வீட்டு முற்றங்களிலும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த உலமாக்கள், இனி ஷரீயத் சட்டங்களுக்கு மட்டுமே பதிலளிப்பார்கள் என விலக்கி வைக்கப்பட்ட22 நிகழ்வும் அந்தக் கல்லூரியின் அடித்தளத்தில்தன் நடந்தது.. மார்க்கமும், நடைமுறை வாழ்வும் வேறு வேறு என்னும் கருத்தை பிரித்தானிய அரசாங்கம் வலிந்து திணித்தது. காஜிக்களுக்கும், முஃப்திக்களுக்கும் ஷரீஅத் கோர்ட்டுக்களில் மட்டுமே பேச இடம் தரப்பட்டது. 1844இல் மதரஸாவில் படித்தவர்களுக்கு அரசு வேலைகள் நிராகரிக்கப்பட்டன. காலம் காலமாக அரசு அலுவல்களிலும், அத்தியாவசிய பத்திரங்களிலும் ஆட்சி மொழியாக இருந்த பாரசீகத்தை தடுத்து ஆங்கிலத்தை புகுத்தினர்.
ஏற்கனவே இந்திய சுதந்திர வேள்விக்காக ஆங்கிலத்தைப் புறக்கணித்துக் கொண்டிருந்த நம் சமூகத்திற்கு இந்த சூழ்ச்சி இன்னும் பெரிய நஷ்டத்தை தந்தது. மதரஸா படிப்பிற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இன்னும் அதிகமான பிளவை ஏற்படுத்தியது. ஆங்கில வழிப்பாடங்களை படிப்பவர்களுக்கும், மதரஸாவில் படிப்பவர்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் புரண்டோடியது. இதன் தாக்கம், மதரஸா பாடங்களில் உலக அறிவை மேம்படுத்தும் பாடங்கள் குறைந்து கொண்டே போனது அல்லது இல்லாமல் ஆகியது. மார்க்க சட்ட திட்டங்களும் வணக்கங்கள் மட்டுமே வாழ்வு, உலக வாழ்வுக்கு, நமக்கும் தொடர்பில்லை என்னும் நிலைக்கு மதரஸா மாணாக்கர்களும், உலமாக்களும் தள்ளப்பட்டனர். இதன் பாதிப்பால் மதரஸா பாடத்திட்டங்களிலிருந்து உலகக்கல்வி வெளியேற்றப்பட்டது.
இதே பிரச்சினையையொட்டி வட இந்தியாவெங்கும் மதரஸாக்களில் சிறு சிறு மறுமலர்ச்சிகளும்(மஸ்லக்) நாளடைவில் தோன்ற ஆரம்பித்தன. எல்லா மதரஸாக்களிலும், குறிப்பாக தியோபந்தின் தாருல் உலூமிலும் மறுமலர்ச்சியை சந்திக்கும் நேரம் வந்து விட்டிருந்தது. வேறு வேறு பெயர்களில் (தியோபந்திகள், அஹ்லே ஹதீத், பரேல்விகள், நத்விகள் இத்தியாதி...) ஆரம்பிக்கப்பட்டாலும், நோக்கம் மட்டும் பொதுவானதாகவே இருந்தது. இதே நேரத்தில்தான் 1875இல் மத்ரஸத்துல் உலூம் முஸல்மானே ஹிந்த் என்னும் பெயரைத் தாங்கியமுஹம்மதியன் ஆங்க்லோ ஓரியண்டல் கல்லூரி துவங்கப்பட்டது. பின்னாளில் அதுவே அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது(1920)23. அதுவரை பிரித்தானியப் பேரரசால் கொடிய வாழ்வை சந்திக்க இயலாமல் திணறிக்கொண்டிருந்த இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு இது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது எனலாம். இந்தக் கல்வி நிறுவனம் ஆரம்பித்த பின்னரே, இதன் மூலமே அகில இந்திய முஸ்லிம் சங்கம் உருவானது. 1940களில் இந்தச் சங்கமும், 1919இல் ஜாமியத்துல் உலமாவும் இந்திய சுதந்திரத்தீயை சரியான திசையில் செலுத்தும் மாலுமிக்களாக இருந்தனவென்றால் அது மிகையில்லை24,25. தன் கல்வி ஞானத்தாலும், பேனாவின் ஆற்றலாலும் காங்கிரஸை பிரித்தானிய அரசுக்கு எதிராக நடை போட வைத்த பெருமையும் நம் முன்னோர் வழி வந்தமௌலானா அபுல் கலாம் ஆஸாத்தையே சாரும். அவருடைய அறிவாற்றலால் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சராய் அமர்த்தப்பட்டார்26.
எங்கே வீழ்ந்தோம் நாம்?:
இப்படி சாதனைகள் பல புரிந்திருந்தாலும், வெற்றிகளும், புகழ் மாலைகளும் பல சூடியிருந்தாலும், நம் சமூகம் இன்று உணவுக்கும், உறைவிடத்திற்கும் அலைய வேண்டிய அவலநிலை ஏற்பட்டது ஏன்? சுதந்திர இந்தியாவிற்காக பல்லாயிரக்கணக்கான உலமாக்களையும், குடும்பங்களையும், குழந்தைகளையும் கூட இரையாக்கிய நம் சமூகம் இன்று கூனிக்குறுகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்? மறுமலர்ச்சிகள் பல நூறு தடவை மலர்ந்திருந்தாலும், ஒரு தெள்ளிய நோக்கை, ஒரு திட்டமிட்ட இலக்கை நோக்கி செல்லும்படியான வேகமும், விவேகமும் எவற்றிற்கும் இல்லாமல் போனது ஏன்? இருக்கிறது, ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஒரு மௌன அழுகை இருப்பது போல், நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட நம் சமூகம் இன்று கேட்பார் எவருமிலாமல் போன அனாதையாய் நிற்கிறதே அது ஏன் என இதன் காரண காரியங்களை உற்று நோக்குவதே நாம் இந்த சறுக்கலிலிருந்து மீள வழி செய்யும்... இன்ஷா அல்லாஹ்.பிரித்தானிய அரசு ஆட்சிக்கு வரும் முன்னர் இருந்தே நம் தோல்வி துவங்கி விட்டது. வியப்பாக இருக்கிறதா? இதுவே உண்மை. பிரித்தானிய அரசுக்கு முன் நம் முன்னோர்கள் எவ்வாறு படித்தனர், எத்தகைய நூற்களை, பாடங்களை படித்தனர் என்பதை உற்று நோக்கினால் புரியும், நம் சறுக்கலுக்கான முக்கிய காரணி. ஆம்.... ‘வரலாறு’ எனும் முக்கிய பாடத்தை ஷாஹ் வலியுல்லாஹ்வின் பாடத்திட்டத்திலும் காணவில்லை, ஷிஹால்வியின் பாடத்திட்டத்திலும் காணவில்லை. இதுவே, முக்கிய காரணி. இல்லை, அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நன்றாக கற்காததால்தான் நாம் வீழ்ந்தோம் என்பவர்களிடம் சில கேள்விகள்.
இருபது வருடங்களுக்கு முன்பு வரை வல்லரசாக இருந்த ரஷ்யாவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலிடத்தில்தான் இருந்தது.
இன்று வல்லரசாய் இருக்கும் அமெரிக்காவும், தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் எங்களை முறியடிக்க எவருமிலர் என்று கர்ஜிக்கும் அமெரிக்காவும் சில வருடங்கள் முன்னர் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியிலிருந்து இன்னும் வெளியேற இயலாமல் தத்தளிக்கிறது.
இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம். அதில் உதுமானியப் பேரரசும் ஒன்று எனலாம். ஆட்சியை அதிகரிக்கவும், எல்லைகளை விஸ்தரிக்கவும் தெரிந்தவர்களுக்கு மக்களின் மனதில் நம்பிக்கையை, அதன் மூலம் மனபலத்தை வளர்க்கத் தெரியாமல் போனதும் ஒரு காரணம்.
உதாரணமாக இன்னொரு வீழ்ச்சியையும் பார்க்கலாம். நான்கு மைல்களுக்கு ஒரு கல்விக்கூடம் என்றும், தனது ஆட்சியின் கீழ் இருக்கும் முஸ்லிம் மக்களை ஹதீத்தையும், குர்’ஆனையும் படிக்க வலியுறுத்தியும், முதன் முதலில் இந்தியாவில் நூலகங்களையும் ஏற்படுத்தியும், பூரண மதுவிலக்கு சட்டத்தையும் அமுல்படுத்தியும், பிரித்தானிய அரசுக்கே ராக்கெட்டை ஏவி தனது அறிவியல் - பலத்தையும் காட்டிய மாவீரர் திப்பு சுல்தானின் கல்வித்துறையின் சாதனைகளைப்22 பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நாளைய மாணவச்செல்வங்களுக்கு திப்பு சுல்தானும் ஒரு அரசராக இருந்தார் என்று மட்டுமே தெரியுமே தவிர, நம் பாரம்பரியத்தைப் பற்றித் தெரியாது. அஷோக சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளை மனனம் செய்யும் குழந்தைகளுக்கு, நம் முஸ்லிம் / மொகலாய மன்னர்கள் யாரும் இப்படி இருக்கவில்லையே எனத்தான் தோன்றும். அந்த வடுதான், அந்த எண்ணம்தான் வளர்ந்து கொண்டே இருக்கும் நம் தோல்வியின் அஸ்திவாரம்.
கணிதத்தில் அல்ஜீப்ராவிலிருந்து, மருத்துவத்தில் கண்களுக்கான சத்திர சிகிச்சை வரை23 உலகம் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் பல தொழில்நுட்பங்களையும், பாடங்களையும், அடிப்படைகளையும் தந்த நம் முஸ்லிம் சமுதாயம், உலகிற்கு வாழும் வழி முறைகளையும், குடும்ப - சமூக பண்புகளையும், குணநலன்களையும் சேர்த்தே கற்றுத்தந்தது. ஆனால் கற்றுத்தந்த நாமே அதை மறந்து போனதும், நிராகரித்ததும், வரலாற்றின் மிக வேதனையான பக்கங்கள். எதிரில் வரும் பெண்ணின் மீது பார்வையை ஏவினார் என்பதற்காக அந்தத் தோழரின் முகத்தை தன் கையால் திசை திருப்பிய24 நபிகளாரின் வழி வந்த நாம், கோப்பையில் மதுவும், காதினில் கஜலும், கண்களுக்கு விருந்தாய் பெண்களின் நடனமும் என மாறிப்போனது, முஸ்லிம் சமுதாயத்தின் வீழ்ச்சியின் தொடக்கப்புள்ளி. ஆனால், அப்படி தறிகெட்டுப் போன ஒரு தலைமுறையின் தொடக்கம் எங்கே? நமக்களிக்கப்பட்ட வேதத்தையும், நபிகளாரின் வாழ்வையும் சரிவர கற்காதது, அறிவுக்கெட்டாத செய்கைகளின் மூலம் ஞானத்தைத் தேடியது, முடிவில் கற்பனையிலும் எட்டாத கொடுமைகளையும், குழப்பங்களையும் கொண்ட ஆட்சியாளர்களாய் வாழ்ந்தது. நபிகளாரின் வாழ்க்கை ஒரு வரலாறு. சஹாபாக்களின் வாழ்க்கை ஒரு வரலாறு. தத்தம் குணநலன்களின் மூலமே உலகின் பல்வேறு இடங்களில் இஸ்லாத்தைப் பரப்பிய அறிஞர்களின் வரலாறு... இவற்றில் எதுவுமே இல்லாமல் வாழ்ந்த தலைமுறையினாலேயே நாம் இன்று இந்த நிலையில் உள்ளோம்.
மலேசியாவின் சமகாலத்திய இஸ்லாமிய தத்துவஞானியும் சிந்தனையாளருமான சய்யித் அல் அத்தாஸ் கூறுகிறார்25,
”தற்போதைய காலகட்டத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்திற்கும் ஆரம்பப்புள்ளியாக ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும் என்றால், அது நாம் தொலைத்த ‘அதப்’ என்றே சொல்வேன். (அதப் : Adab : أدب : நடத்தை).வரிசைக்கிரமமாக சொன்னால்,
1. (பெறுகின்ற / பெறப்பட்ட) அறிவில் உள்ள குழப்பமும், தவறுகளும், காரணிகளை உருவாக்குவது;
2. சமூகத்தில் ‘அதப்’ / நடத்தை தொலைந்து போவது; மேற்கண்ட (1) மற்றும் (2) காரணங்களால்,
3. முஸ்லிம் சமுதாயத்திற்கு சற்றும் பொருந்தாத, தலைமைப் பதவிக்கு தகுதி இல்லாத, தார்மீக அறிவார்ந்த மற்றும் ஆன்மீகம் தரத்தைப் பெறாத ‘தலைவர்களின்’ எழுச்சியும், அவர்களின் ஆட்சியால் தொடர்ந்து (1) முதலாம் காரணியை நிலை நிறுத்தச் செய்தலும்.
மேலே கண்ட இந்த வேர்கள்தான் நம்முடைய இந்த நிலைக்கு ஒரு தீய வட்டத்திலேயே உழன்று கொண்டிருக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து கொண்டிருக்கும் காரணிகள். இந்த நச்சு வட்டம் உடைத்து இந்த கல்லறை பிரச்சினைக்கு தீர்வாக பொருட்டு, நாம் முதலில் இழந்த அதப்பை, வரலாற்றை திரும்ப கொண்டு வர வேண்டும். ஏனெனில் யாருக்கு கல்வி தரப்படுகிறதோ, யார் ஞானத்தாகத்தில் இருக்கிறார்களோ அவர்களிடம் இந்த நன்னடத்தையும், அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் ஆற்றிய அரும் பெரும் சாதனைகளின் அறிவும் இருத்தல் வேண்டும். அதுவே வெற்றியின் அடிகோலாகும்.
ஒரு சமயம் ஈராக்கில் உள்ள பஸ்ரா நகரின் கல்வியாளர்கள் நிறைந்ததொரு ஒரு சபையில் அரபியொருவர், ஒரு சிறுவனைப் பார்த்து அவரின் நண்பரிடம் கூறினார், ”நானும் என் குழந்தைகளுக்காக பெரும் பெரும் செலவெல்லாம் செய்து நல்ல நல்ல 'மு'அத்தபீன்'களைக்26 கொண்டு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்...என்றாலும் இந்த சிறுவனைப் போல அவர்களின் குணநலன்கள் இல்லை என்று. யார் அந்தச்சிறுவர்? பின்னாளில் ’ஷேக்குல் இஸ்லாம்’ என்றும், ’அஹ்லஸ் ஸுன்னாவின் இமாம்’ என்றும் நற்புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞரும், தத்துவ ஞானியுமான இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்27 (ரஹி) அவர்களே அந்தச் சிறுவர். எத்தனை ஒரு சீரான பாதை என்று பாருங்கள். நன்னடத்தையுள்ள ஒரு சிறுவன், கல்வியாளர்களுடன் தொடர்பில் இருப்பவன் பின்னாளில் விவேகமும், அதனால் புகழும் பெறுகிறார் என்றால், நடுவில் எந்தத் தடையாவது உள்ளதா? இந்த எளிய உதாரணம் போதாதா?
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் மட்டுமல்ல, இறுதி இறைத் தூதர் மாநபி (ஸல்) அவர்கள், தாம் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட காரணமே நற்குணங்களை சீரமைக்கவே என்று கூறியுள்ளார்28. மாநபியைப் படைத்து நம்மிடையே அனுப்பி வைத்த ஏக இறைவனும் நபிகளாரை, நற்குணங்களில் உன்னத நிலையை உடையவர் என்கிறான்29. ஏனைய நபிகளைக் குறிப்பிடுகையில் அல்லாஹ், அவர் வாய்மையாளராக இருந்தார், நேர்மையாளராக இருந்தார் என்று குறிப்பிடும் வேளையில் இவ்வுலகின் கடைசி மனிதர் வரைக்கும் பின்பற்றக்கொடுத்த நபிகள் நாயகத்தை(ஸல்), அல்லாஹ் நற்குணங்களைக் கொண்ட உன்னதமானவர் என்கிறான். இதுவே நமக்கு குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள பாடமாகும். இபாதத்தில் மட்டுமல்லாது வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என நம் இறைவன் நமக்கு சொல்வதாகும். நம் சமூகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தற்போது வேரோடியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் முழுத்தீர்வு, இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நன்னடத்தையை கற்பிப்பதும், வரலாற்றை எத்தி வைப்பதுவும் மட்டுமே...!
வரலாற்றைப் படிப்பதனாலும், நன்னடத்தையாலும் மட்டுமே நாம், நமது சமூகம் வெற்றி பெற முடியுமா?
இந்தக் கேள்விக்கு பதிலாக ஒரு சமுதாயத்தின் வரலாற்றை உங்களைப் படிக்க அழைக்கிறேன் வாருங்கள்:மஸதா தாக்குதலுக்கும் அழிவுக்கும் பிறகு பாலஸ்தீனின் கடற்கரையோரப் பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட யூதர்களுக்கு, வாழ்க்கை எப்போதும் போல் பிரச்னைகள் மிக்கதாகத்தான் இருந்தது. ஆனால் அழிவுகளாலும் இழப்புகளாலும் இடமாற்றத்தாலும் அவர்கள் நிலைகுலைந்து போய்விடவில்லை. ரோமானியர்களை எதிர்த்து அவர்கள் செய்த கலகங்களும் சிறு புரட்சிகளும் தொடர்ந்து தோல்வியையே தழுவி வந்தாலும் ஒரு சிறிய நம்பிக்கைக்கீற்று அவர்களிடையே இருந்தது.யுத்தத்தால் ஜெயிக்க முடியாதவர்களை புத்தியால் ஜெயித்தால் என்ன? இதுதான் அவர்களது யோசனையின் ஒருவரிச் சுருக்கம். பின்னாளில் தமது சரித்திரமெங்கும் அறிவாளிகள் என்றும் புத்திசாலிகள் என்றும் ராஜதந்திரம் மிக்கவர்கள் என்றும் குயுக்திக்குப் பேர்போனவர்களாகவும் யூதர்கள் சித்திரிக்கப்பட்டதற்கெல்லாம் ஆரம்பம் இங்கேதான் நிகழ்கிறது.அப்பொழுது வகுக்கப்பட்ட அந்தத் திட்டத்தின் பலனை இன்று நாம் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் பார்த்த வண்ணமே உள்ளோம். இல்லை என சொல்ல முடிகிறதா??? முந்தைய சமுதாயங்களையே திருக் குர்’ஆனில் குறிப்பிடும்போது அல்லாஹ், அவர்களின் வரலாற்றில் நமக்குப் பல பாடங்கள் உள்ளதாகத்தானே சொல்கிறான்31. அதே போலவே இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேறி மீண்டும் வெற்றியாளர்களாய் திகழ, இதே பாணியில் இப்போதே திட்டமிட வேண்டும். இந்தத் திட்டத்தின் சாராம்சத்தை நம் சமூகத்தின் எதிர்கால வெற்றிக்கு ஏற்றவாறு திட்டமிட்டு வரிசைப்படுத்தலாம் வாருங்கள்:
அன்றைய ஜெருசலேம் யூதர்களிடையே இத்தகைய யோசனையை முன்வைத்து, நம்பிக்கையூட்டியவர்கள், சில துறவிகள். யூதத் துறவிகள். ரோமானியர்களால், ஜெருசலேம் ஆலயம் இடிக்கப்படுமுன்பே பல்லாண்டுகளாக அக்கோயிலில் வசித்துவந்த ஜொஹனன் பென் ஸகாய் (Johannan Ben Zachai) என்கிற துறவி அவர்களுள் முக்கியமானவர். ஸகாயின் யோசனை என்னவென்றால், ரோமானியர்களின் தனிச்சிறப்பாக என்னென்ன உள்ளதோ, அவற்றையெல்லாம் யூதர்களும் முதலில் பெறவேண்டும். அவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்றால், யூதர்களும் கல்வியில் சிறந்தவர்களாக ஆகிவிடவேண்டும். அவர்கள் பணபலம் படைத்தவர்கள் என்றால் நாமும் பணத்தைப் பெருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது கலாசாரப் பெருமைக்கு யூதர்களின் பெருமை எள்ளளவும் குறைந்ததல்ல என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும். நமது தேசத்துக்குள் வேண்டுமானால் யாரும் ஊடுருவலாமே தவிர, நமது இனத்துக்குள் அது முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். பிரித்து வாழ வைத்தாலும் மனத்தால் ஒன்றாகவே எப்போதும் இருப்பவர்கள் என்பதை ஆணித்தரமாக உணரச் செய்யவேண்டும்.
மாபெரும் யூத சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவுவது என்கிற பெருங்கனவின் முதல் செங்கல், இந்த யூதத் துறவியினாலேயே முதல்முதலில் எடுத்து வைக்கப்பட்டது. "புத்தியால் வெல்வது" என்கிற அவரது வார்த்தைகள் ஒவ்வொரு யூதரின் மனத்திலும் மந்திரம் போல பரவிப் படர்ந்தது.அன்று தொடங்கி, அவர்கள் கிளர்ச்சி செய்வதை அறவே நிறுத்தினார்கள். மாறாக, தம் சந்ததியினருக்கு முறையான கல்வி அளிப்பதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். ஸகாய், வேறு சில யூத மத குருக்களையும் அழைத்துக்கொண்டு ரோமுக்குப் போனார். சக்கரவர்த்தியைச் சந்தித்து, ஜுதேயா யூதர்கள் இனி கிளர்ச்சி செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை அளித்தார். ரோமானிய ஆளுகைக்கு உட்பட்ட குடிமகன்களாகவே அவர்கள் நடந்துகொள்வார்கள் என்று வாக்களித்து, பதிலுக்கு ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் கேட்டார். பாலஸ்தீன் நிலப்பரப்பின் கடற்கரையோர கிராமங்களிலும் நகரங்களிலும் யூதக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை ரோமானியப்படை இடிக்கக் கூடாது. அங்கே யூத சாதுக்கள் மதப்பாடங்களை நடத்துவதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. ரோமானிய மன்னர் இந்த எளிய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். பள்ளிக்கூடங்களை இடிக்கக்கூடாது; மதபோதனைகளைத் தடை செய்யக்கூடாது. அவ்வளவுதானே என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், இதற்குள் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஸகாயின் கோரிக்கை, யூதகுலமே அழியாமல் தடுப்பதற்கான ஒரு கேடயம். கல்வி வளர்ந்து, மதமும் தழைப்பது என்றால் என்ன அர்த்தம்? அதைக்காட்டிலும் யூத குலத்துக்கு ஒரு பெரிய பாதுகாப்பு ஏது? சுயராஜ்ஜியம் என்றைக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். அதற்காக எப்போது வேண்டுமானாலும் போராடலாம், வெற்றி பெறலாம். முதலில் இனம் அழியாமல் காப்பதல்லவா முக்கியம்? மதம் காணாமல் போய்விடாதவாறு தடுப்பதல்லவா முக்கியம்?
அதுவும் எப்படிப்பட்ட காலகட்டம் அது! காட்டுத்தீ போல மத்தியக் கிழக்கு முழுவதும் கிறிஸ்தவம் பரவிக்கொண்டிருந்த காலம் அது. இது சநாதன யூதர்களுக்கு மாபெரும் இடைஞ்சலாக இருந்தது. எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்றபோதும் யூதர்களின் மதம் எத்தனை சிறப்பு மிக்கது, புராதனமானது என்பதையெல்லாம் தம் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கே எடுத்துச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் யூத குருமார்களுக்கு இருந்தது. இதற்காகவாவது யூதப்பள்ளிக்கூடங்களில் "தோரா"வைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
ஆகவே, யூதர்கள் கிளர்ச்சியை நிறுத்தினார்கள். அறிவுப்புரட்சியை ஆரம்பித்தார்கள். பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். தாமும் மிகத்தீவிரமாக மதக் கடமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். உழைக்கும் நேரமெல்லாம், வேறு சிந்தனையில்லாமல் உழைப்பது. சம்பாதிப்பதை கவனமாகச் சேமிப்பது. ஓய்வு நேரத்தில் பிரார்த்தனைகள், பிரசங்கங்கள் கேட்பது. கோயிலுக்குத் தவறாமல் செல்வது. குழந்தைகளின் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவது. அவர்களை மதத்தின் பாதையிலிருந்து வழுவாமல் பாதுகாப்பது.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லாத காரியங்களாகத் தோன்றலாம். ஆனால் அன்றைக்கு ஒட்டுமொத்த ஜுதேயா யூதர்களும் இவற்றை ஒரு வேள்வி போலச் செய்தார்கள். தம்மைச் சுற்றி அவர்கள் எழுப்பிக்கொண்ட பெருஞ்சுவரின் அடிக்கற்களாக அமைந்தது, கல்விதான். இதில் சந்தேகமே இல்லை. இன்றைக்கும் சர்வதேச அளவில் தொழில்நுட்பத்திலும் நவீன வேளாண்மையிலும் தலைசிறந்தவர்களாக யூதர்களே விளங்குவதைப் பார்க்கலாம். இந்த வளர்ச்சிக்கான வித்து அன்று ஊன்றப்பட்டதுதான்.
ஆசிரியர்களும் குருமார்களும் சம அந்தஸ்து உள்ளவர்களாக அறியப்பட்டார்கள். அதாவது, மதகுருக்களுக்கு அளிக்கப்பட்டுவந்த அதே அளவு மரியாதை கல்வியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் "ரபி" (Rabbi) என்று அழைக்கப்படத் தொடங்கினார்கள். ஒட்டுமொத்த யூத குருமார்களும் இந்த மாறுதலை ஏற்கவில்லை என்றாலும் பெரும்பாலான குருமார்கள் காலத்தின் தேவை கருதி, கல்வியாளர்களைத் தங்களுக்குச் சமமானவர்களாக அங்கீகரிக்கவே செய்தார்கள். ரபன் கமால்யேல், இது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சிரியா, ரோம் என்று யூதர்கள் அதிகம் வாழ்ந்துவந்த பிற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.
காலடியில் இட்டு நசுக்கப்படும் ஒரு சமூகம் எழுந்து நிற்கவேண்டுமென்றால் கல்வி வளர்ச்சியினால் மட்டுமே அது சாத்தியம் என்பதே அப்போதைய ஜுதேயா யூதர்களின் தாரக மந்திரம். இந்தக் காரணத்தினால்தான் அவர்கள் கல்வியாளர்களை மதகுருக்களுக்கு நிகரான அந்தஸ்தில் வைத்தார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டார்கள். கிடைத்த அறிவுச் செல்வத்தையெல்லாம் மனத்தில் இருத்திக்கொண்டார்கள். 30
1. ஒவ்வொரு சம்பவத்திற்கும் யாரொருவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் எதிர்ச்செயல் ஆற்றுவதை நிறுத்தி தகுந்த பதிலை தக்க முறையில் அளித்தல் வேண்டும். (React Vs Response)
2. பிறக்கும் ஒவ்வொரு முஸ்லிம் குழந்தைக்கும் கட்டாயக் கல்வி என்பது விரைவாக அமலாக்கப்பட வேண்டும். இதை எந்த அரசும் செய்யாது. நம் சமூகத்திற்கு நாம்தான் செய்ய வேண்டும்.
3. நாம் வாழும் மார்க்கம் மெய்யானது மட்டுமில்லாமல் எத்தனை சிறப்பு மிக்கது, புராதனமானது, எத்தனை சாதனையாளர்களையும், சாதனைகளையும் தோற்றுவித்த மார்க்கம் என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு மட்டுமில்லை. எல்லாப் பெற்றோருக்கும் இவை எல்லாம் விரல் நுனியில் தெரிந்திருக்க வேண்டும்.
4. இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் எல்லாம் தஃப்ஸீரையும், ஹதீத்களையும் கற்றுத் தர வேண்டும். குறிப்பிட்ட, பள்ளிக்கல்வியில் தேறாத, வறுமையில் உழல்கின்றவர்களுக்கு மட்டும் தர்ஸ்-ஏ-நிஜாமியும், ஸிஹாஹ்-ஸித்தாவும் என்பதை வேரறுத்து ஒவ்வொரு குடும்பத்தின் குழந்தைகளும் இவற்றை கற்றுக்கொள்ள வழி செய்யப்பட வேண்டும்.
5. எந்தக் காரணங்களுக்காகவும் பள்ளி செல்வதிலிருந்து குழந்தைகளை நிறுத்தாமல் கல்வியை பரிபூரணமாக்க வேண்டும்.
6. பெற்றோரும், மற்றோரும், நம் சமூகத்திற்கு இந்தத் திட்டத்தையும், அதனால் இன்ஷா அல்லாஹ் நாம் எதிர்பார்க்கும் வெற்றியையும் பற்றி தெளிவான உரைகள் நிகழ்த்த வேண்டும். பரப்ப வேண்டும்.
7. எந்தப் பணியில் இருந்தாலும், பணியில் இருக்கும்போது வேறெந்த சிந்தனையுமின்றி உழைக்க வேண்டும்.
8. உடலையும், மூளையையும் கசக்கி சம்பாதித்த பணத்தை கவனமாக சேமிக்க வேண்டும். சேமிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். சமுதாய தலைவர்களும் நிதி மேலாண்மையில் உள்ளோரும் அதற்கு உதவ வேண்டும்.
9. ஓய்வு நேரங்களில் ஊடகங்கள் வழியாகவோ உள்ளூர் ஜமாஅத் வழியாகவோ இஸ்லாமியப் பிரச்சாரங்களையும், பயான்களையும் கேட்க வேண்டும். தவறாமல் மார்க்கம் சம்பந்தப்பட்ட வகுப்புக்களில் கலந்து கொள்ளல் வேண்டும்.
10. குழந்தைகளின் கல்வியை, அதன் மீதான அமலை தீவிர கவனத்துடன் உற்று நோக்க வேண்டும். நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை மார்க்கப்பிடியிலிருந்து வழுவாமல் பார்க்க வேண்டும்.
பத்தே பத்து விதிகள். இன்ஷா அல்லாஹ் இவை பின்பற்றப்பட்டால் நம் தமிழக சமூகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகில உலக இஸ்லாமிய சமூகமும் எழுந்து நிற்க இதுவே அடித்தளமாகும். எனினும், இவற்றில், கல்விப்பணிக்கான புரட்சியை மட்டும் எப்படி நம் தமிழக சமூகம் நடைமுறைப்படுத்துவது, அதற்கான படிகள், வழிகள், திட்டங்கள் யாவை, போன்ற தலைப்புக்களை மட்டும் இன்ஷா அல்லாஹ் இந்த ஆய்வுக் கட்டுரை மூலம் நாம் தெளிவடைய முயல்வோம் இன்ஷா அல்லாஹ்.
பெண்களும், புரட்சியும்:
முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாத்தை ஏற்று தன் அபரிமிதமான நம்பிக்கையை வெளிப்படுத்திய கதீஜா(ரலி) முதல், இன்றைய சகோதரி தவக்குல் கர்மன் வரை ஒவ்வொரு புரட்சிக்குப் பின்னரும் ஒரு பெண் இருந்துள்ளார், இருக்கிறார்.... இனியும் இருப்பார். முழுப்புரட்சி என்பது அந்தப் புரட்சியில் பெண்கள் முழுப்பங்காற்றுவதில்தான் உண்டு. குகைக்குச் சென்று வந்த தன் கணவன் ஏதோ பிதற்றுகிறாரோ, அதை ஒரு காதில் உள்வாங்கி இன்னொரு காது வழியாய் விட்டு விடலமோ என்று கதீஜா(ரலி) அவர்கள் எண்ணியிருந்தால் இன்று இந்த மார்க்கம் எந்த நிலையில் இருந்திருக்கும்.... நம்மால் கற்பனையும் செய்ய இயலாது. புதிதாய் மலர்ந்த ஒரு நம்பிக்கைக்காக இத்தனை பெரிய சோதனையா...இதை தாங்கித்தான் ஆக வேண்டுமா என சுமைய்யா (ரலி) அவர்கள் எண்ணியிருந்தால், அவரின் தியாகத்தினால் பலங்கொண்ட இந்த மார்க்கம் என்றோ இறந்து போயிருக்கும்.தன் குழந்தையின் கண் பார்வை திரும்பி வர இறைவன் மட்டுமே துணை புரிய முடியும் என்று நம்பி, அந்த நம்பிக்கையை மெய்ப்பித்தும் காட்டிய தாய்களைக் கண்டது இந்த மார்க்கம். இஸ்லாமைப் புரிந்து இஸ்லாத்தை தழுவுவதே தன் மஹராகும் என அந்தச் சூழ்நிலையிலும் இறைவாக்கை எத்தி வைத்த தாய்மார்களைக் கொண்டது இந்த மார்க்கம். முழு அரபையே ஆண்டு கொண்டிருக்கும் இனிய மார்க்கத்தின் தலைவர் தன் தந்தைதான் என்றாலும், செல்வத்தின் வாசனையையோ, அதிகாரத்தின் சுவையையோ கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காத பெண் மக்களை வென்றெடுத்தது இந்த மார்க்கம். இறைத்தூதரே தன் கணவன் என்ற போதிலும் தன் மீதான அவதூறுக்கு மமதையில் பதில் தராமல், பொறுமையைக் கைக்கொண்டு இறைவன் மூலமே சத்தியத்தை வெளிக் கொண்டு வந்த தாயின் மார்க்கம், இந்த மார்க்கம். இன்று, அடிமைச்சங்கிலிகளை உடைத்தெறிந்து எமனின் மக்களை துனிசியாவின் ‘மல்லிகை மணத்தினை’ நோக்கித் திருப்பி, அதன் மூலம் நாட்டில் நல்லதொரு மாற்றத்திற்கு வித்திட்ட சகோதரி தவக்குல் கர்மன்32 வரைக்கும், வேகமும் விவேகமும் முன்மாதிரியான குணநலன்களையும் கொண்ட பெண்களை உந்துசக்திக்களாக தன் வழியெங்கும் சேமித்து வந்த மார்க்கம், இந்த மார்க்கம். எனவே மேலே கண்ட திட்டங்களை செயல் வடிவத்தில் கொண்டு வருவதற்கு முழு முதற்காரணிகளாக நிற்கக்கூடியவர்கள் நம் சமூகப் பெண்களே.
இதே போன்றொரு ஒரு இக்கட்டான சூழ்நிலை 18ஆம் நூற்றாண்டில், இன்றைய நைஜீரிய நிலப்பரப்பில் ஏற்பட்டபோது, சோர்ந்து போகாமல், துவளாமல், நம்மால் என்ன செய்ய இயலும் என்று விட்டு விடாமல், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, சரியான திட்டமிடலுடன் தன்னந்தனிப்பெண்ணாக ஒரு புரட்சியை ஏற்படுத்திய நானா அஸ்மா33வின் பாதையே நம் சமூகப்பெண்களுக்குமான பாதை. இதே பாதையின் இன்னொரு வடிவத்தை சமகாலத்திய ஃபர்ஹத் ஹாஷ்மி34என்னும் பாகிஸ்தானிய சகோதரியும், கனடாவில் இருந்துகொண்டு ஆங்கிலம் / உருது இஸ்லாமியப் பாடங்கள் மூலம் பல பெண்களை மார்க்கத்தின் பிடியில் மீண்டும் கொண்டு வந்துள்ளார்... இன்னும் வெற்றியின் பாதையிலேயே பயணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எனவே எல்லா சமூகங்களிலும் இருக்கும் வினையூக்கிகளான பெண்களை, அவர்களின் ஆற்றலை சரி வர கையாண்டாலே இன்ஷா அல்லாஹ் நம் சமூகம் முன்னேற்றப்பாதையின் பல படிகளைத் தாண்டியிருக்கும், இன்ஷா அல்லாஹ்.
நானா அஸ்மா - யார் இவர்?
இன்றைய நைஜீரியாவின் அன்றைய ஆட்சியாளரின்(18ம் நூற்றாண்டு) செல்ல மகளாக பிறந்தவரே நானா அஸ்மா. கடுமையாக இறைப்பணி ஆற்றி சத்தியத்தை எத்தி வைத்துக்கொண்டிருந்த அவரின் தந்தையையும் குடும்பத்தாரையும் கூண்டோடு நாடு கடத்தினார்கள். வீர தீரம் மிக்க, இறை நம்பிக்கையாளர்களையும், இறைவன் மேல் நம்பிக்கையையும் மட்டுமே கொண்ட அந்த சாம்ராஜ்ஜியம் (சொகடோ என்றழைக்கப்பட்டது) மீண்டும் அரியணை ஏறினார்கள். தந்தையை இழந்து சகோதரனும் சகோதரியும் மட்டுமே ஆட்சியை வலுப்படுத்த வேண்டியவர்கள். அன்றிலிருந்து துவங்கியது நானா அஸ்மாவின் திட்டமும், வெற்றியும்.ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படவேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு மார்க்க அறிவு தெளிவாக போதிக்கப்பட வேண்டும். இது தான் அஸ்மாவின் அடிப்படை எண்ணமாக இருந்தது.35
நானா அஸ்மாவின் திட்டம்தான் என்ன?
கிட்டத்தட்ட இன்றைய MLM Marketing நிபுணத்துவம்தான் அதில் இருந்தது. அதாவது, ஒழுக்கத்தில் சிறந்த, கற்கும் ஆர்வம் கொண்ட சில பெண்களைத் தேர்ந்தெடுப்பது. அவர்களுக்கு குர்’ஆனும், ஹதீஸ்சும், இஸ்லாமிய வாழ்வு முறையும், விதிகளும் கற்றுத் தருவார். அவர்கள், தம்மிடத்திற்கு திரும்பிய பின் அங்கிருக்கும் மற்ற மக்களுக்கு அதனை எத்தி வைப்பர். அவர்கள் இன்னும் பிறர்க்கு. இவ்வளவேதான் திட்டம். ஆனால் தெளிவான ஒரு திட்டத்துடன், தடைக்கற்களை தகர்த்தெறியத் தெறிந்த விவேகத்துடன் செயல்படுத்தியபோது இன்றளவும் பேசப்படுகிற ஒரு கல்விப்புரட்சியாக36 மாறியது.இதனை நாம் செயல்படுத்துவது எப்படி?
மிகச் சுலபம். இதை மூன்று பகுதியாக பிரிப்போம். முதல் பகுதி பெண்களுக்கானது.
பெண்களின் மார்க்கக் கல்வி:
கல்வி கற்றுச் செல்லும் மாணாக்கர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்த உலகின் முதன் முதல் பல்கலைக்கழகம்A3 கூட மர்யம், ஃபாத்திமா என்னும் இரண்டு சகோதரிகள் உருவாக்கியதே. அந்த சமூகத்தின் வழி வந்த நாம் இன்றைக்கு பெண் கல்வியை ஏறெடுத்துப்பார்க்கிறோமா?? இஸ்லாத்தின் வரலாற்றில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், அவர்களின் கல்வியிலும், சேவையிலும் மிளிர்ந்தது. நபியவர்களின் காலத்திலிருந்து பெண்கள், மருத்துவர்களாகவும், தாதிகளாகவும் பெரும் பங்காற்றினர். ஒவ்வொரு போரின் முடிவிலும், உயிர்களைக் காப்பாற்றவும், வாழவைக்கவும் அவர்கள் செய்யும் போர் எழுத்திலடங்காதது. ஸ்பெயினின் இஸ்லாமிய ஆட்சியிலும், அப்பாஸித் ஆட்சியிலும் இரகசிய கடித போக்குவரத்துக்களுக்கு உதவுபவர்களாயிருந்தனர்.37 மார்க்கத்தின் பல துறைகளைக் கற்கவும், ’இஜாஸா’க்கள் (பட்டங்கள்) பெறவும், ஆசிரியர்களாவதற்கும், பண்டிதர்களாவதற்கும் வாய்ப்புக்கள் பல திசைகளிலிருந்து அழைத்தன. மத்திய காலத்தில் கிட்டத்தட்ட 8000 சட்ட நிபுணர்களைப் பற்றி முஹம்மத் அக்ரம் நத்வி, மத்தியகாலத்தில் பெண்களின் நிலையைப் பற்றிய தனது நூலில்38 குறிப்பிடுகிறார். கிழக்கு நாட்டு ஆசிரியர்களின் ஒருவரான இக்னாஸ் கோல்ட்ஜிஹரின் கூற்றுப்படி அப்போதிருந்த ஹதீஸ் கலை வல்லுனர்களில் கிட்டத்தட்ட 15% பேர் பெண்களே என்கிறார். இப்படியாக இருந்தது இஸ்லாமிய வரலாற்றில் பெண்களுக்கான பங்கு. ஆனால் இன்று?சில பெரு நகரங்களில் ஏற்கனவே நடந்துகொண்டிருந்தாலும், பல பெண்களுக்கு இதைப் பற்றிய ஞானம் இல்லை. அப்படியே தெரிய வந்தாலும், குடும்பச்சுமைகள் காரணமாக போக இயல்வதில்லை. குர்ஆன் ஹதீத் பாடங்கள் மட்டுமன்றி, நாம் இருந்து கொண்டிருக்கும் இந்த அவசரகால நிலையைப் பற்றி, வீரமும், வெற்றியும், சாந்தியும் பரவியிருந்த நம் வரலாற்றைப்பற்றி, இன்றைய மக்களின் இத்தகைய நிலைக்கு இஸ்லாமிய ஷரீஅத் எத்தனை உதவியாக இருக்கும் என்பதைப் பற்றி, குடும்பத்திலிருந்து சமூகம் வரை பெண்களால் எப்படி இஸ்லாத்தை செயல்கள் மூலம் காட்டி வெற்றியடைய முடியும் என்பது வரை என ஒரு விரிந்த பாடத்திட்டமாக இருத்தல் வேண்டும். ஏன்? ஏனெனில் இந்தக் கல்வியானது, இன்றைய சமுதாயத்தையும், இனி வரும் சமுதாயத்தையும் மீண்டும் ஒரு சகாப்தத்தை படைப்பவர்களாய் மாற்ற வேண்டிய கல்வி. சிறு சிறு குழுவாக ஆரம்பித்து இதை இயக்கங்கள் தாண்டிய ஒரு செயலாக கொண்டு போக வேண்டும். பொதுவாக ஒரு இடத்தையோ அல்லது ஒரு வீட்டையோ தேர்ந்தெடுத்து இதனைச் செய்யலாம். பெங்களூருவில் பல வசதியான வீடுகளின் பேஸ்மெண்ட்டை / அடித்தளத்தை இந்த மாதிரி வகுப்புக்களுக்காக உபயோகிக்கின்றனர். வாகன வசதியில்லாத பெண்களுக்கு மற்ற பெண்கள் உதவுகிறார்கள். பக்கத்திலிருக்கும் மஸ்ஜிதில் இருந்து இமாமோ / ஹஜரத்தோ வந்து தஜ்வீத் சொல்லித் தருவது, தேர்வுகள் வைப்பது என இணைந்து செய்கிறார்கள்.
இன்னுமொரு சாரார் அலுவலக வேலையில் இருக்கும் பெண்கள். இவர்களால் வாரநாட்களில் நடக்கும் கூட்டங்களுக்கோ / வகுப்புக்களுக்கோ போக முடிவதில்லை. இங்கே நாம் சகோதரி.ஃபர்ஹத் ஹாஷ்மி போல் தொழிநுட்பத்தை உபயோகிக்கலாம். வார நாட்களில் நடக்கும் வகுப்புக்களை (இன்றுதான் மடிக்கணிணியில் கூட ஏகப்பட்ட தொழில்நுட்பம் வந்து விட்டதே) பதிவு செய்து ஒலி / ஒளி தொகுப்புக்களாக அனுப்பலாம். வலைத்தளத்தில் பதிவேற்றி இணைப்பு கொடுக்கலாம். இப்படி தொழில்நுட்பத்தை நமக்கான விதத்தில் உபயோகிப்பதுவும் ஒரு வெற்றிப்படியே..!
இதன் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் குடும்பத்தில் உள்ள ஆண் நபர்கள். கூட்டுக்குடும்பமோ, தனிக்குடும்பமோ, குடும்பத்தின் பொறுப்பான ஆண்கள் இதற்கான தேவையறிந்து, இதனை எளிதாக்கித் தர வேண்டும். எத்தனை பெரிய பள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகள் படித்தாலும், வீட்டில் தாய் சொல்லித்தரும் விதத்திலேயே அதிக புரிதலும் ஒட்டுதலும் ஏற்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் தாய்மார்கள், கல்வியறிவிலும், மார்க்க அறிவிலும் சிறந்து விளங்கும்போது கற்றல் என்பது இன்னும் இன்னும் மேம்படுகிறது.
முஸ்லிம் நிர்வாகத்தினரால் நிறுவப்பட்டு நல்முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எந்தக் கல்வி நிறுவனங்களிலும் கூட பெண்களுக்கு வசதியைத் தரக்கூடிய, அவர்களின் நிலையறிந்து தேவையறிந்து உதவிடக்கூடிய சாத்தியங்களை காண முடிவதில்லை. இது போல பல பல குடும்பங்களில் இன்றும் பெண்களை சீக்கிரமே மணமுடித்துக் கொடுத்து விடுகின்றனர். அல்லது, கணவன் வீட்டில் படித்துக்கொள்ளலாம் என முடக்கி விடுகின்றனர். எல்லோருக்கும் இந்நிலை இல்லை, அல்ஹம்துலில்லாஹ் என்றாலும், இத்தகைய சூழ்நிலைகளால் பட்டமோ, மேல்படிப்போ பெறும் ஆர்வம் இருக்கும் எத்தனை எத்தனை பெண்களின் நிலை பாழாகிறது?? போர்களில் தாதிக்களாக சேவையாற்றி வந்த சமூகத்தில் இன்று மருத்துவ தேவைக்காக இரத்தம் பரிசீலனை செய்யும் இடங்களிலோ, அல்ட்ராசவுண்டு ஸ்கேனிங் செண்ட்டர்களிலோ ஒரு முஸ்லிம் பெண்ணைக்கூட காண முடியவில்லை.
இன்னொரு முக்கிய கேள்வியும் இங்கே உள்ளது. நம் சமூகப்பெண்களின் தேவையறிந்து கல்விச்சேவையை எத்தனை பேர் ஆற்றுகிறோம்? ஏன் நம் சமூகப்பெண்களுக்காக மட்டுமே என்று இதுவரை ஒரு டுட்டோரியல் கல்லூரி / மாலை நேர பள்ளி / திறந்தவெளி பல்கலைக்கழகம் (இல்லையென்றால் ஒரு பள்ளிக்கூடம் மட்டுமே கூட போதும்) தொடங்கப்படவில்லை..? அகில இந்திய அளவில் சென்ஸஸ் எடுக்கும்போது கல்வியறிவு பெற்ற கிறித்தவ பெண்கள் 76.19 விகிதமும், சீக்கியப் பெண்கள் 63.09 விகிதமும் உள்ளனர். ஆனால் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவு மட்டும் 50.9 மட்டுமே39. இது, இந்தியாவில் கல்வியறிவு பெற்றுள்ள அனைத்து பெண்களின் விழுக்காடை விடக் குறைவாகும்(53.67). அதிலும் 2011 நிலவரப்படி தேசிய அளவில், உயர்நிலைக்கல்வியை 10 சதவிகிதத்தை விடக் குறைவான பெண்களே நம் சமூகத்தில் முடித்துள்ளனர்40. என்ன ஓர் இழிநிலை... இதற்கு உபாயம்தான் என்ன??
முதல் வழி ‘டுட்டோரியல்’. வீதிக்கொரு பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு வீதியிலும் டுட்டோரியல்கள் உள்ளன. இவற்றின் மூலம், எதோ ஒரு காரணத்தினால் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளான மாணவ மாணவிகள், அல்லது, தங்கள் பள்ளி மூலம் இவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என ‘பத்திரம்’ தரப்பட்ட பலர், இந்த டுட்டோரியல்கள் மூலம் 10வது, 12வது இன்னும் பல பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். நாமும், நம் சமூகப்பெண்களுக்காக ஒரு டுட்டோரியல் ஆரம்பிக்கலாம். அந்த டுட்டோரியலுக்கென்று ஒரு இடமோ, பொதுவான ஒரு பள்ளியிலோ, மகளிருக்கென்று தனி இடம் தரும் பள்ளிவாசல்களிலோ அல்லது இஸ்லாமிய பள்ளிக்கூடங்களிலோ மாலை நேரம் / விடுமுறை நாட்களிலோ இப்படி பள்ளிக்கு சென்று படிக்க இயலாத பெண்களுக்கு பொதுத்தேர்வுக்கான கல்வியை, அந்த டுட்டோரியலின் ஆசிரியர்கள் மூலம் அளிக்கலாம்.
இன்னொரு வழி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருப்பது போல குழுக்கள் தொடங்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் தத்தம் இடம் / மொஹல்லா / ஊரைச் சார்ந்த குடும்பங்களில் உள்ள வயது வந்த பெண்கள், தாய்மார்கள், படிக்கும் ஆர்வம் இருந்தும் பல காரணங்களால படிப்பை தொடர இயலாமல் போன சிறுமிகள் முதல் பெரியவர் வரையுள்ள முஸ்லிம் பெண்களைக் கணக்கெடுத்து ஒரு சிலரை மட்டும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான கல்வியை கற்றுத்தர வேண்டும். ஒரு இயக்கத்தின் கீழோ / அறக்கட்டளையின் கீழோ இத்தகைய குழுக்கள் நடக்கும்போது பாடத்திட்டங்கள், தேவையான நூற்கள், தகவல்கள், கையேடுகள் என எல்லாவற்றையும் சேகரிக்கவோ, அச்சடித்து வைத்துக்கொள்ளவோ இயலும். அதைக் கொண்டு அடிப்படை முதல் உயர்நிலை வரையிலான கல்வியை தர இயலும். இதே குழுக்கள் பெண்களால் செய்யக்கூடிய அரசு வேலைகளைப் பற்றிய தகவல்களையும் திரட்டி வைத்து அதிலும் பெண்களை இணைய வைக்க வேண்டும். அரசுப் பணிகள், உதவிகள், நலத்திட்டங்கள் பற்றிய எல்லா திசைகளையும் கவனித்து, தகவல்களைத் திரட்டவும், தேவைப்படுவோருக்கு அதை சேர்ப்பிக்கவும், அதை அவர்களுக்கு பெற்றுத் தருவதில் உதவியும் செய்ய வேண்டும். நன்கு கற்ற பெண்கள், மார்க்கம் தெரிந்த பெண்கள், அனுபவத்தையே முதலீடாகக் கொண்ட பெண்கள் என குழுவின் நிர்வாகத்தில் தேர்ந்த பெண்களை இணைக்கும்போது ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நானா அஸ்மாவுக்கு இணைதானே....
இன்னொரு முக்கியமான வழி, நம் நாட்டில் காணக்கிடைக்காத வழி, மசூதிகளை இஸ்லாமியக் குடும்பங்களின் நிர்வாகக் கேந்திரமாகவும், கல்விக்களமாகவும் ஆக்குவது. இன்னும் பல மசூதிகளில் பெண்களுக்கு என்று தனியறையே இல்லை. மஸ்ஜிதுன் நபவியை முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் எழுப்பும்போது அதை மூன்று இடங்களாக பிரித்திருந்தார். தொழும் இடம், தங்கும் இடம், மக்தப்(ஆரம்பப் பாடசாலை). இஸ்லாத்திற்காக கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலிலேயே பெண்களுக்கும் வந்து போக, தொழ அனுமதி இருந்தது. ஆனால் 1400 வருடங்களாகியும் சில இடங்களில் இது இன்னமும் நிறைவேறாத கனவாகவே உள்ளது. இதை நாம் மாற்ற முன்வர வேண்டும். ஒவ்வொரு மஸ்ஜிதிலும் பெண்களுக்கென ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தந்த மஸ்ஜித் இருக்கும் இடத்தில் உள்ள இஸ்லாமியக் குடும்பங்களின் பெண்களுக்கான மார்க்கக் கல்விக்கும், நடைமுறை வாழ்விற்குத் தேவையான அளவு உலகக் கல்விக்கும் வசதிகள் செய்து தர, அரசின் திட்டங்கள், உதவிகள், சமுதாய அறிவிப்புகள் போன்ற பலதையும் பகிர, மார்க்க விஷயத்தில் எந்த ஐயமும் இருந்தால் உடனே களையப்படவும், அதற்கான சரியான தளமாகவும் மசூதி அமையவேண்டும். இதன் மூலம் பெண்களுடைய மற்றும் குழந்தைச் செல்வங்களுடைய ஆர்வத்தையும், மதிப்பையும், அறிவுத்தாகத்தையும் கவரும் இடமாக அந்த மசூதி மாறுகிறது. வாழ்வின் அடுத்த அடியை எடுப்பதற்கு முன் மசூதியில் என்ன தீர்வு சொல்வார்கள், குர்’ஆன் -சுன்னாவிற்கு முரணாக உள்ளதா இல்லையா என மார்க்கத்தை பற்றிப் பிடிப்பதற்கான அந்த நிலைகள் படிப்படியாக வந்து சேரும். யாரொருவர் தான் சார்ந்திருக்கும் மார்க்கத்தைப் பற்றி, தன் சமுதாயத்தின் வரலாறு பற்றி, தான் போக வேண்டிய பாதை பற்றி தெளிவாக இருக்கிறாரோ பிறகு அங்கே முன்னேற்றத்திற்கு தடை ஏது????
உண்மையிலேயே பெண்களின் கல்வியைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை என்பது மிக மிக அபாயகரமான நிலை. ஒரு சமூகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் பெண்களை, பெண்களின் அறிவை, ஆற்றலைப் பொறுத்தே இருக்கிறது என்பதை நாம் நினைவிலிருந்து அகற்றக்கூடாது. ஒரு சமயம் கலந்து கொண்ட ஒரு இஸ்லாமிய வகுப்பில், பாடம் நடத்திய மதீனாவின் கற்றறிந்த இமாமிடம் ஒரு மாணவர் கேட்டார்,”எனக்கு திருமணமாகி, குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. எப்போதிலிருந்து அந்தக் குழந்தைக்கு கல்வி கற்பிக்க ஆரம்பிக்கலாம்??”. அதற்கு அந்த இமாம் பதிலளித்தார், “மன்னிக்கவும், உங்கள் குழந்தைக்கான கல்வியின் ஆரம்பம் உங்களுக்கான மனைவியைத்தேடுவதில் இருந்து ஆரம்பிக்கின்றது. நீங்கள் தாமதித்து விட்டீர்கள்” என. ஆம், இஸ்லாத்தில் கல்வி என்பது அந்தக் குழந்தைக்கான தாயை சரியாக தேர்ந்தெடுப்பதில் இருந்து ஆரம்பிக்கின்றது. கருவுற்ற காலத்திலிருந்து அந்தத்தாயின் வழியாக குழந்தைக்கும் உலக அறிவும், மார்க்க அறிவும் செல்கிறது. தாய்க்கே சரியான புரிதல், கல்வி இல்லாவிட்டால் அந்தக் குழந்தையின் நிலை??
நம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இரண்டு விதிகள் மிக மிக இன்றியமையாதவை. ஒன்று, பெண்களுக்கான கல்வி. இரண்டாவது, நம் சமூகத்திற்கான பாடத்திட்டம் ஒரு போதும் மாற்று மத பாடத்திட்டங்களுடன் ஒத்துப் போகாது என்பதில் தெளிவாக இருப்பது. நம்முடைய திட்டங்கள் அனைத்தும் குர்’ஆன் மற்றும் நபிவழியின் மூலமே அமைய வேண்டும். முதல் விதிக்கான யோசனைகளை மேலே பார்த்தோம். இரண்டாவது விதிக்கான யோசனைகளையும் இந்தக் கட்டுரையில் படிப்போம் இன்ஷா அல்லாஹ்.
சுருங்கச் சொன்னால், ”ஒரு ஆணுக்கு கல்வி என்பது. அந்த ஆணோடு முடிந்து விடும். ஆனால் ஒரு பெண்ணின் கல்வி, ஒரு குடும்பத்திற்கே கல்வி. ஒரு குடும்பத்திற்கு தரப்படும் கல்வி, ஒரு சமுதாயத்துக்கே தரப்படும் கல்வி41”என்னும் கூற்றை நினைவில் வைத்து, இப்படியான மாற்று வழிகளை அவசியம் கைக்கொள்ள வேண்டும். படித்த ஒரு தகவலில் இப்படி எழுதப்பட்டிருந்தது. Plan -A தோற்றுப்போனால் என்ன, ஆங்கில எழுத்துக்களில் இன்னும் இருபத்தி ஐந்து எழுத்துக்கள் பாக்கி உள்ளனவே... :)
குழந்தைகளின் கல்வி:
இது இரண்டாவது பகுதி. ஆனால் மிக மிக முக்கிய பகுதி. ஆனால் இதைப் பற்றி விரிவாய் போவதன் முன் ஒரு பழைய ஹாஸ்யத்தை பார்த்து விடலாம்.18, நவம்பர் 1949இல் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி IV பிரிவு 45இன் கீழ், “அரசு தன் முழுப் பொறுப்பிலும் செலவிலும் கட்டாய, கட்டணமில்லாக் கல்வியை 10 ஆண்டுகளுக்குள் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரவேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.
என்ன, படித்ததும் எந்த நாட்டில் இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா. இந்திய நாட்டின் சட்டமே இது. இதைத்தான் ஹாஸ்யம் என்றேன். ஏன்? கீழே அதன் பின் நடந்தவற்றைப் படித்தாலே புரிந்து விடும்.
இந்திய உச்சநீதிமன்றம், 1993இல் “பிரிவு 45 கல்வி பெறுவதைக் குழந்தைகளின் அடிப்படை உரிமையாகக் கொள்ள வேண்டும்” என மிகத் தெளிவாகக் கூறியது.
2002ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 86ஆவது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு, பிரிவு 21A உருவாக்கப்பட்டது. இப்பிரிவு, “அரசு தான் இயற்றும் சட்டம் மூலம் எவ்வகையில் தர விரும்புகிறதோ அவ்வகையில் 6 முதல் 14 வயது குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வியைத் தரவேண்டும்” எனக் கூறியது. மேலும் பிரிவு 51Aஇல் (k) சேர்க்கப்பட்டது. இதன் மூலம் “குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டிய கடமை பெற்றோர்க்கு உண்டு” எனக் கூறப்பட்டது.
கவனிக்க இதுவரை அரசுகளுக்கு மட்டுமே இருந்த, இருக்க வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கு மாற்றப்பட்டதன் மூலம் அரசு தன் பொறுப்பைக் கைகழுவிவிட்டது. இதைத் தொடர்ந்து இயற்றப்பட்ட குழந்தைகளின் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன் உள்நோக்கத்தையும் பார்த்து விடலாம்.
• பலவகைப் பள்ளி முறை தொடரும் என்கிறது.
• தனியார் – அரசு கூட்டு உண்டு.
• தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது எந்தச் சமூகக் கட்டுப்பாடும் கிடையாது.
• தனியார் பள்ளியில் அரசு செலவில் மாணவர் சேர்க்கை (25%). இதன் மூலம் படிப்படியாக அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அரசுப் பள்ளிகளை மூடும் மறைமுகத் திட்டம் போன்றவை இச்சட்டத்தின் ஆபத்து.
சென்னையில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் 30 மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதே போன்று மூடப்படும் அச்சுறுத்தலில் தற்போது பல அரசுப் பள்ளிகள் உள்ளன என்பது வருத்தமான செய்தி. கர்நாடக மாநிலத்தில் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு ஓர் ஆண்டு கழித்து கடந்த கல்வி ஆண்டில் 3000 அரசுப் பள்ளிகளை மூட அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது இதற்கு ஓர் ஆதாரம்42.
இத்தகைய மக்கள் கல்விக்கு எதிரான கல்வி உரிமைச்சட்டம்-2009 கல்வி உரிமையை வழங்காது. மாறாக, குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை மறுக்கவே செய்கிறது. இதனால் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்துத் தனியார் பள்ளிகளை ஊக்குவித்து, கல்வி வழங்கும் தன் பொறுப்பிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொள்ளும் நயவஞ்சகச் செயல் செவ்வனே நடைபெறுகிறது. ஆனால் நம் சமூகத்தில் பார்த்தீர்களானால், சமுதாயத்தலைவர்களிலிருந்து, இஸ்லாமிய பள்ளி நிறுவனங்களிலிருந்து, ஊடகங்களிலிருந்து, பள்ளிவாசல் நோட்டீஸ் போர்டு வரையிலும் இதைப் பற்றி யாரும் பேசவில்லை. ஏன்? இதுதான் நம் சமூகத்தின் நிலை. ஒவ்வொரு துறையிலும் நுண்ணிய ஆய்வையும், தேடலையும் மேற்கொள்ளாததாலும், ஊடகங்களையே பெரும்பாலும் நம்பியிருப்பதாலும் வந்த நிலை. எத்தனை எத்தனை குடும்பங்கள் இன்று கல்விச்சூளைகளில் கேட்கும் பணத்தை தர இயலாமல் மடிகின்றன. எத்தனை லட்சம் குழந்தைகள் இதனால செங்கல் சுமக்கவும், பொதி சுமக்கவும் தள்ளப்பட்டுள்ளனர். ஏன் இதை நாம் வலியுறுத்தவில்லை? இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை? ஏன்? ஏன்?? ஏன்???
இத்தகைய சட்டம் வந்திருந்தால் மட்டும் நம் சமூகம் முன்னேறி இருக்குமா?
அப்படிச் சொல்லவில்லை. ஆனாலும், இப்படி ஒரு சட்டம் அமலாக்கப்பட்டிருந்தால், நம் சமூகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காடு கொஞ்சமேனும் தேர்ச்சி பெற்றிருக்கும். குறைந்த பட்ச கல்வியாவது அனைவருக்கும் கிடைத்திருக்கும். நான் தேடிய வரையிலும் இதைப் பற்றி நம்மில் யாரும் பேசியது போன்றே தெரியவில்லை. ஆனால் அதற்குள் அரசுப் பள்ளிகளில் நம் குழந்தைகளுக்கு தேவையான பாடங்கள் கிடைப்பதில்லை என தனியார் பள்ளிகளை நிறுவி விட்டோம். அரசுப் பள்ளிகள் எட்டாயிரம் வாங்கினால் நாம் பதினாறாயிரத்தி சொச்சமாவது வாங்குகிறோம். இல்லையா? இஸ்லாமியப் பள்ளிகளின் கட்டணம் மிக அதிகம், இஸ்லாமிய பாடப்புத்தகங்கள் விலை அதிகம், இஸ்லாமிய ஆடியோ/வீடீயோ விலை அதிகம். இத்தனை அதிகத்தையும் உள்ளே போட்டு விழுங்கி தங்கள் மக்களுக்கு இத்தகைய பள்ளிகளில் படிக்க வைக்க பெற்றோர்கள் தயாராக உள்ளனர். ஆனால் அதன் பயன்??????
நம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகளவில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களின் இன்றைய நிலை குறிப்பிடத்தக்க தோல்வி. இதனை மனம் திறந்து யாரும் ஒத்துக்கொள்ள முடியவில்லை எனினும் இதுவே உண்மை. மூன்று வகையான மிகப்பெரிய தோல்விகள் இந்தப் பள்ளிகளை சுற்றியுள்ளன. நிதி நிர்வாகத்தில் தோல்வி, பள்ளி நிர்வாகத்தில் தோல்வி, இறுதியாக பாடத்திட்டங்களிலும் தொல்வி.
இதன் தோல்வியடைந்த பாடத்திட்டங்களுக்கு உதாரணமாய் ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்கிறேன். இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளின் வாழ்வுமுறைக்கும், குணநலன்களுக்கும், விருப்பங்களுக்கும், புரிதல்களுக்கும் பொதுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? எத்தனை விகிதம் இந்த வித்தியாசம் உள்ளது? வார இறுதியில் கிரிக்கெட்டும், வீடீயோகேமும் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளைக் கண்டால் யார் யார் எந்தப் பள்ளி என நம்மால் வித்தியாசம் சொல்ல இயலுமா? இத்தனை காலமாய் பெரும்பெயரை நாட்டியுள்ள எந்த நாட்டுப் பள்ளிக்கூடத்திலிருந்தும் இன்னொரு இப்ன் படூட்டா, இன்னொரு அல் க்வாரிஸ்மி, இன்னொரு அல் ஜஸாரி..... ஏன் எந்தத் துறையிலும் இன்னும் ஒரு சாதனையும் நம் மாணவச்செல்வங்கள் நிகழ்த்தவில்லை? இந்தக் கேள்விகளின் விடை ‘இல்லை’ என்றால், வெற்றி எங்கே போனது??? இந்த தோல்விகளின் மூலக்காரணம் என்ன?
இஸ்லாமியப் பள்ளிகளை உருவாக்கியதிலும், சமூகத்தை அதன் பயன் பெறச் செய்ததிலும், இன்று வரை அவற்றை நிர்வகித்து நடத்துவதிலும், தடைகளைத்தாண்டி வளர்ச்சியைக் காட்டுவதிலும், பலரின் அயராத உழைப்பும், வியர்வையும், ஊனும், உறக்கமும் செலவிடப்பட்டுள்ளன. அதில் எந்த கருத்து பேதமும் இல்லை. சமூக முன்னேற்றத்தின் இந்த அடியை எடுத்து வைத்ததில் பெரும்பங்கு, அப்போதிலிருந்து இப்போது வரை இருக்கும் இந்தப் பள்ளிகளுக்கு உண்டு. மாஷா அல்லாஹ்.
ஆனாலும், பொதுப்பள்ளிக்கூடத்திற்கும், இஸ்லாமியப் பள்ளிக்கூடத்திற்கும் வார இதழில் சொல்வது போல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில வித்தியாசங்களே உள்ளன. அவை யாவன. ஆண், பெண் பேதம் கற்றுக்கொள்வது, இஸ்லாத்தின் ஐந்து தூண்கள், சில அடிப்படைகள், அரபியில் ஓதத் தெரிதல், சிறிய குர்’ஆன் மனனம். இதைத்தவிர வேறு ஏதேனும் உண்டா??? பல இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் பொதுப்பள்ளிகளிலிருந்து வித்தியாசமாய் இஸ்லாமிய அடிப்படையும், அரபியும் மட்டுமே மிகுதியான பாடங்களாய் கற்றுத்தரப்படுகின்றன. அதையுமே சரி வர செய்கிறோமா? இஸ்லாமியப் பாடங்களை கற்றுக்கொடுப்பவர்கள் இஸ்லாத்தை எத்தனை கற்றுள்ளார்கள், எப்படி வெளிப்படுத்துகிறார்கள்? எனக்குத் தெரிந்த பல இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் பணி புரியும் சகோதரிகளின் ஹிஜாபே சங்கடத்தைத் தரும் வகையில்தான் உள்ளது. எனது சகோதரரின் மகன், மசூதியில் குழந்தைகளுக்கு கற்பித்துக்கொடுக்கும் சகோதரரிடம் அரபி கற்றுத்தேறி, அவனின் பள்ளியில் அரபி கற்றுத்தரும் ஆசிரியரின் உச்சரிப்பையே சரி செய்கிறான் - இது நடப்பது பெங்களூருவில். அதாவது, பொதுப்பள்ளிக்கும் இஸ்லாமியப் பள்ளிக்கும் வித்தியாசம், இஸ்லாமியப் பாடமும், அரபியும்தான் என எடுத்துக் கொண்டால், அவை இரண்டும்தான் இன்று இஸ்லாமியப்பள்ளிகளின் தோல்விக்கு கட்டியம் கூறுகின்றன. இப்படித்தான் பல இடங்களில் உள்ளன.
உதாரணமாக இன்னொரு கேள்வி. இந்தியாவின் முதன் முதல் எலிமெண்டரி ஸ்கூல் எங்கே உதயமானது? நம்மில் எத்தனை பேருக்கு இந்த விடை தெரியும்?இந்திய முஸ்லிம்களின் கல்வியறிவிற்கு வித்திட்டவர், பெரும் பங்காற்றியவர் யார் தெரியுமா??? கடந்து வந்த பாதை தெரியாத எந்த இனமால் முன்னேறிச் செல்ல முடியும் சொல்லுங்கள்... இந்திய முஸ்லிம்களின் வரலாறு ஏன் பிள்ளைகளுக்கு நம் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் கூட போதிக்கப்படவில்லை?? அவுரங்கசீபைப் பற்றியும், அக்பரைப் பற்றியும் பொதுப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்கும் இஸ்லாமியப் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கும் தெரிந்த தகவல்களில் எத்தனை வித்தியாசம் நாம் காண முடியும்?? இதுதான்... இதெல்லாம்தான் நம் இஸ்லாமியப் பள்ளிகளின், இஸ்லாமியப் பாடத்திட்டங்களின் பெரும் பிழைகள். அடுத்து நிர்வாகமும், தொலைதூரத் திட்டமில்லாத பயணங்களும்.
முதலில் பாடத்திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம். என்னென்ன பாடங்களை நாம் திட்டத்தில் காண்கிறோம்? ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணிதம், வரலாறு, பூகோளம், கணிணிக் கல்வி, வட்டார மொழி / தாய் மொழி, அரபி, குர்’ஆன் மனனம், தஜ்வீத், சீறா. ஆனால் இதில் மாற்று மதத்தவர், அரசு பொதுப்பள்ளி திட்டத்திற்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அறிவியலில் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புக்களைப் பற்றிய பாடமில்லை. டார்வினின் பரிணாமத்தை முழுவதுமே அகற்றி விடுகிறோம். ஏன் அது சரியான வாதமல்ல என்பதற்கான விளக்கமான பாடம் இல்லை. அறிவியலாசிரியர்களுக்கே இதைப் பற்றி எந்தளவு தெரியும் என வியக்கிறேன். ஏனெனில் பல பள்ளிகளிலும், துறை சார்ந்த, அந்தந்த துறையில் மேலாய்வு செய்திட்ட, கற்றதோடு நில்லாமல் நடைமுறையில் அனுபவமும் பெற்றிட்ட ஆசிரியர்களை நாம் போடுவதில்லை. ஒன்றிரண்டு பள்ளிகளில் சரிவர இவ்விதியைக் கடைபிடித்தாலும் பல பள்ளிகளில் மனனம் செய்து கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தால் போதும் என்னும் நிலை. பின் எப்படி குழந்தைகள் கற்பர்? எப்படி குழந்தைகளின் அறிவோ ஆர்வமோ ஒரு பாடத்தில் மலரும்? எவ்வாறு பெட்டிக்கு வெளியே சிந்திக்கத் தூண்டும். அப்படித் தூண்டாத கல்வியினால் பயன் உண்டா?? சிந்தனை செய் சமூகமே...
அதே போல் நம் பள்ளிக்கூடங்களில் அரபியோ, தஜ்வீதோ, குர்’ஆன் ஹிஃப்தோ கற்றுத்தருபவர்கள் ‘இஜாஸா’ வைத்திருக்கிறார்களா என்றால் அதிகமான பதில், “இல்லை” என்றே வருகிறது. அந்த அளவு படித்த ஆலிம்களோ, ஆலிமாக்களோ தரக்கூடிய சம்பளத்திற்கு கிட்டவில்லை என்றால், இருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளியின் சார்பில் / அறக்கட்டளை சார்பில் கற்க அனுப்புகிறோமா அதுவும் இல்லை. பின், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னேறத் தூண்டும் உந்து சக்தி எது? ஆங்கிலவழிக்கல்வி என பெயர் சூட்டப்பட்டாலும் ஆங்கில வகுப்பில் மட்டுமே ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது. ஏனைய பாடங்களின் வகுப்புக்களில் வட்டார மொழியிலேயோ அல்லது ஆங்கிலமும் வட்டார மொழியும் கலந்தோ பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால் மொழியில் புலமை பெறும் எண்ணமோ, சீர் தூக்கிப் பார்க்கும், சரி வர கற்கும் எண்ணமோ சுத்தமாக அடிபட்டுப் போகிறது. இவை மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற குறைகள் உள்ளன. நிதி நிர்வாகத்தில் இருக்கும் உள்ள குறைகளைப் பற்றியோ, பள்ளி நிர்வாகத்தன்மையில் உள்ள பெரும் சறுக்கல்களைப் பற்றியோ பேச இந்தக் கட்டுரையில் இடமில்லை. எனினும் அவற்றையும் சரி செய்ய வேண்டிய நிலை இருப்பதை மறக்கவோ, மறுக்கவோ கூடாது.
ஆரம்பப் பள்ளிகளிலேயே இப்படி என்றால் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில்? மருந்துக்காவது தனிகுணநலன்களுடன் கூடிய மாணாக்கரைக் காண்கிறோமா? வேறு பாடத்திட்டங்களைக் காண்கிறோமா....அதுவும் இல்லை. அங்கேயும் அரசின் வழி பாடத்திட்டங்களோடு சிறிதே இஸ்லாமியக் கல்வியையும் சேர்த்துக் கொள்கிறோம். இதனால் சிறு வயதிலிருந்து பக்குவமடையும் வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எல்லாமே நாமே ஒரு வரைமுறையைக் கற்றுத் தருகிறோம். என்ன அது? இஸ்லாமியக் கல்வியும், அரபியும், எல்லாப்பாடங்களையும் போல இன்னொரு பாடமே. இதற்கென தனி முக்கியத்துவம் இல்லை. சரிதானே? இப்படித்தானே அந்த பிஞ்சு உள்ளங்கள், பாடத்திட்டங்களை எடை போடும்? இதற்கான மேன்மையை, தேவையை நம்மால் காட்ட இயலுமா... இதே வழியில் சென்றால் கண்டிப்பாக முடியாது. என்ன செய்யலாம்?
இன்று நம்மிடம் இருக்கும் அனைத்து இஸ்லாமியப் பள்ளிகளும் பள்ளிவாயில்களுடன் இணைய வேண்டும். வார இறுதிகளில் இமாமுடன் சேர்ந்து மற்ற ஆர்வமுள்ள சகோதரர்களும், சகோதரிகளும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் / குழந்தைகளுக்கான வர்க்ஷாப்கள் நடத்த வேண்டும். அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள உலகக் கல்வியிலிருந்து மார்க்கக் கல்வி வரையான பாடங்களில் புரிதலை ஏற்படுத்தும் வகையில் உதவ வேண்டும். இஸ்லாமிய வழிமுறையில் ஆராய்ச்சிகளையும் பரிசோதனைகளையும் செய்வதில் உதவிட வேண்டும். ஒவ்வொரு விடுமுறையின்போதும் பள்ளிவாயில்கள் வழியாக குர்’ஆன் வகுப்புக்களும், விடுமுறை கால சான்றிதழ் பாடங்களையும் தர வகை செய்ய வேண்டும். பள்ளிவாயில்கள் ஒவ்வொன்றிலும் சிறுவர் சிறுமியர், இளைஞி / இளைஞர்களுக்கென தனி குழுக்கள் அமைத்து அவர்களின் முன்னேற்றம், கல்வியில் பின்தங்கியிருந்தால் அதற்கான உபாயம், உதவி செய்ய வேண்டும். இதெல்லாம் நாளைய சமுதாயத்தை பள்ளிவாயிலின் பக்கம் ஆர்வமூட்டவும், அதனுடன் இணைந்து மார்க்கத்தில் வெற்றி பெறவும், சமூகத்தை முன்னெடுத்துச் செல்லவும் உதவிடும்.
*******************
A2. http://en.wikipedia.org/wiki/Sachar_Committee
A3: http://en.wikipedia.org/wiki/University_of_al-Karaouine
1. ”அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா?” (39:9)
2. “என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக!” என்றும் இறைஞ்சுவீராக!” (20:114)
3. உதாரணமாக ''...பருவகாலத்தில் எவ்வாறு கனிகின்றன என்பதனைச் சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள்! இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்குத் திண்ணமாக இவற்றில் பல சான்றுகள் உள்ளன.'' (6:99)
4. 35:28 மேலும், இவ்வாறே மனிதர்கள், விலங்குகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகின்றார்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.
5. “யார் கல்வியைத் தேடி ஒரு பதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். ” என அறிவிக்கப்பட்டுள்ளது. (அறிவிப்பவர் அபூ ஹுரைரா: முஸ்லிம் 5231).
6. ஒருவன் பிறருக்குக் கற்பித்து பரவச் செய்த கல்வி, அவன் விட்டுச் சென்ற நல்லொழுக்கமுள்ள சந்ததி, அவன் விட்டுச் சென்ற (பயனுள்ள) நூல், அவன் கட்டிய பள்ளிவாசல், வழிப்போக்கர்களுக்காக எழுப்பிய விடுதி, அவன் வெட்டிய ஆறுகள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழும் போது தனது பொருளிலிருந்து அவன் செய்த தர்மங்கள் ஆகியவை ஒரு மனிதனது மரணத்திற்குப் பின்னரும் பயனளிக்கும் நல்லறங்களில் உள்ளவையாகும். இவற்றின் நன்மைகள் அவனது மரணத்திற்குப் பின்னரும் அவனுக்குக் கிடைக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) இப்னு மாஜா:242, இப்னுகுஸைமா)
7. Al Nadvi & Moinuddin, Survey of Muslim Education: India (Cambridge: The Islamic Academy, 1985), pg5.
8. "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
9. Ghulam „Ali Azad Bilgirami (d. 1785) Ma’athir al-Kiram - referred in Sayyid Manazir Ahsan Gilani, Pak-o-Hind main Musalmanon ka Nizam-e-Ta‘lim-o-Tarbiyyat. (Lahore: Maktaba
Rahmaniyya, n.d.) 19.
10. Ibid, 21.
11. „Abd al-Hayy al-Hasani, al-Thaqafah al-Islamiyyah fi al-Hind, (Damascus: Mujamma„ al-Lugha al-„Arabiyyah bi
Dimashq, 1983), 135.
12. Ibid, 9-10.
13. Gilani, 139. Also cited by Nizami in Khaliq Ahmad Nizami, Islami Tehzib ka Asar Hindustan par, (Lucknow,
Majlis Tehqiqat-o-Nashriat-e-Islam, 1982), 42.
14. Al-Nadvi & Moinuddin, 4.
15. Ibid, 5.
16. http://en.wikipedia.org/wiki/Dars-i_Nizami
17. Gilani, 155
18. Sahih al-Bukhari, Sahih Muslim, Jami‘ Tirmidhi, Sunan Abu
Dawud, Sunan al-Nisa’i and Sunan Ibn Majah and al-Muwatta of Malik.
19.http://www.readislam.net/sihah.html
20. http://www.natpu.in/?p=27728
21. Yoginder Sikand, Bastions of the Believers. Madrasas and Islamic Education in India
22. http://www.thoothuonline.com/மே-4-மாவீரன்-திப்புசுல்தா/
23. http://www.1001inventions.com/
24. புகாரி-பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6228, அறிவிப்பாளார்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி)
25. http://www.scribd.com/doc/32659313/Al-Attas-Islam-and-Secularism
26. யார் இந்த 'மு'அத்தபீன்கள்? 'அதப்' என்னும் வார்த்தையில் இருந்து தோன்றிய பெயரே அது. "அதபை சொல்லித் தருபவர்கள்" அதாவது குழந்தைகளுக்கு நன்னடத்தையையும், நல்ல குணநலன்களையும் சொல்லித்தருபவர்கள். அந்த காலங்களில் அரேபிய வழக்கப்படி 'மு'அத்தபீன்' எனப்படுபவர்களிடம் குழந்தைகளை அனுப்பி பாடம் படிக்க வைப்பதும், அல்லது 'மு'அத்தபீன்'களை வீட்டீலேயே வரவைத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதும் பொதுவான ஒரு செயல்.
27. http://www.youtube.com/watch?v=PbqypNG6trk - The Mother of Imam Ahmad Ibn Hanbal (ra) by Dr. Hesham al-Awadi
28. நபி (ஸல்) கூறினார்கள்
நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன். (அஹ்மத், பைஹகீ)
29. 68:4 மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்.
30. நிலமெல்லாம் இரத்தம் தொடர் - 7 - புத்தியால் வெல்வது (நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 டிசம்பர், 2004)
31: அவர்களின் வரலாறுகளில் அறிவுடைய மக்களுக்குப் படிப்பினை உள்ளது'' (12:111)
32: http://en.wikipedia.org/wiki/Tawakkol_Karman
33: http://en.wikipedia.org/wiki/Nana_Asma%E2%80%99u
34: http://en.wikipedia.org/wiki/Farhat_Hashmi
35. http://www.ethirkkural.com/2012/04/blog-post_27.html
36. http://chnm.gmu.edu/wwh/p/214.html
37. “If you educate a man, you educate an individual. If you educate a woman, you educate a nation.” Dr. Kwegyir Aggrey (1872-1927), preeminent Ghanaian scholar and educator.
38. http://www.countercurrents.org/farooqi090311.htm
39. http://www.nytimes.com/2007/02/25/magazine/25wwlnEssay.t.html?_r=0
40.http://twocircles.net/2011jul03/educating_muslim_women_modern_india_problems_and_perspectives.html
41.http://www.rebeccaproject.org/index.php?option=com_content&task=blogcategory&id=87&Itemid=203
42. http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=524
நன்றிகளுடன்:
SOME ASPECTS OF THE MUSLIM EDUCATIONAL SYSTEM IN PRE-
COLONIAL INDIA
by Amer Bashir (PhD ABD, ISTAC )
===================
http://www.sheikhagar.org
===================
http://www.islamicity.com/mosque/ihame/Sec11.htm
===================
http://scholarspen.blogspot.com/2004/09/introduction-to-renowned-dars-e-nizami.html
===================
http://twocircles.net/2011nov02/decline_muslims_nothing_do_%E2%80%98neglect%E2%80%99_science_and_technology.html
===================
நிலமெல்லாம் இரத்தம் | பா. ராகவன்
===================
http://www.muslimheritage.com
===================
https://www.youtube.com/watch?v=AzJP-MGaTz4
===================
http://www.youtube.com/watch?v=gev0pR42cDk
--Nouman ali khan - Islamic schools and education in USA
***************************
நம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகளவில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களின் இன்றைய நிலை குறிப்பிடத்தக்க தோல்வி. இதனை மனம் திறந்து யாரும் ஒத்துக்கொள்ள முடியவில்லை எனினும் இதுவே உண்மை. மூன்று வகையான மிகப்பெரிய தோல்விகள் இந்தப் பள்ளிகளை சுற்றியுள்ளன. நிதி நிர்வாகத்தில் தோல்வி, பள்ளி நிர்வாகத்தில் தோல்வி, இறுதியாக பாடத்திட்டங்களிலும் தொல்வி.
இதன் தோல்வியடைந்த பாடத்திட்டங்களுக்கு உதாரணமாய் ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்கிறேன். இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளின் வாழ்வுமுறைக்கும், குணநலன்களுக்கும், விருப்பங்களுக்கும், புரிதல்களுக்கும் பொதுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? எத்தனை விகிதம் இந்த வித்தியாசம் உள்ளது? வார இறுதியில் கிரிக்கெட்டும், வீடீயோகேமும் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளைக் கண்டால் யார் யார் எந்தப் பள்ளி என நம்மால் வித்தியாசம் சொல்ல இயலுமா? இத்தனை காலமாய் பெரும்பெயரை நாட்டியுள்ள எந்த நாட்டுப் பள்ளிக்கூடத்திலிருந்தும் இன்னொரு இப்ன் படூட்டா, இன்னொரு அல் க்வாரிஸ்மி, இன்னொரு அல் ஜஸாரி..... ஏன் எந்தத் துறையிலும் இன்னும் ஒரு சாதனையும் நம் மாணவச்செல்வங்கள் நிகழ்த்தவில்லை? இந்தக் கேள்விகளின் விடை ‘இல்லை’ என்றால், வெற்றி எங்கே போனது??? இந்த தோல்விகளின் மூலக்காரணம் என்ன?
இஸ்லாமியப் பள்ளிகளை உருவாக்கியதிலும், சமூகத்தை அதன் பயன் பெறச் செய்ததிலும், இன்று வரை அவற்றை நிர்வகித்து நடத்துவதிலும், தடைகளைத்தாண்டி வளர்ச்சியைக் காட்டுவதிலும், பலரின் அயராத உழைப்பும், வியர்வையும், ஊனும், உறக்கமும் செலவிடப்பட்டுள்ளன. அதில் எந்த கருத்து பேதமும் இல்லை. சமூக முன்னேற்றத்தின் இந்த அடியை எடுத்து வைத்ததில் பெரும்பங்கு, அப்போதிலிருந்து இப்போது வரை இருக்கும் இந்தப் பள்ளிகளுக்கு உண்டு. மாஷா அல்லாஹ்.
ஆனாலும், பொதுப்பள்ளிக்கூடத்திற்கும், இஸ்லாமியப் பள்ளிக்கூடத்திற்கும் வார இதழில் சொல்வது போல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில வித்தியாசங்களே உள்ளன. அவை யாவன. ஆண், பெண் பேதம் கற்றுக்கொள்வது, இஸ்லாத்தின் ஐந்து தூண்கள், சில அடிப்படைகள், அரபியில் ஓதத் தெரிதல், சிறிய குர்’ஆன் மனனம். இதைத்தவிர வேறு ஏதேனும் உண்டா??? பல இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் பொதுப்பள்ளிகளிலிருந்து வித்தியாசமாய் இஸ்லாமிய அடிப்படையும், அரபியும் மட்டுமே மிகுதியான பாடங்களாய் கற்றுத்தரப்படுகின்றன. அதையுமே சரி வர செய்கிறோமா? இஸ்லாமியப் பாடங்களை கற்றுக்கொடுப்பவர்கள் இஸ்லாத்தை எத்தனை கற்றுள்ளார்கள், எப்படி வெளிப்படுத்துகிறார்கள்? எனக்குத் தெரிந்த பல இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் பணி புரியும் சகோதரிகளின் ஹிஜாபே சங்கடத்தைத் தரும் வகையில்தான் உள்ளது. எனது சகோதரரின் மகன், மசூதியில் குழந்தைகளுக்கு கற்பித்துக்கொடுக்கும் சகோதரரிடம் அரபி கற்றுத்தேறி, அவனின் பள்ளியில் அரபி கற்றுத்தரும் ஆசிரியரின் உச்சரிப்பையே சரி செய்கிறான் - இது நடப்பது பெங்களூருவில். அதாவது, பொதுப்பள்ளிக்கும் இஸ்லாமியப் பள்ளிக்கும் வித்தியாசம், இஸ்லாமியப் பாடமும், அரபியும்தான் என எடுத்துக் கொண்டால், அவை இரண்டும்தான் இன்று இஸ்லாமியப்பள்ளிகளின் தோல்விக்கு கட்டியம் கூறுகின்றன. இப்படித்தான் பல இடங்களில் உள்ளன.
உதாரணமாக இன்னொரு கேள்வி. இந்தியாவின் முதன் முதல் எலிமெண்டரி ஸ்கூல் எங்கே உதயமானது? நம்மில் எத்தனை பேருக்கு இந்த விடை தெரியும்?இந்திய முஸ்லிம்களின் கல்வியறிவிற்கு வித்திட்டவர், பெரும் பங்காற்றியவர் யார் தெரியுமா??? கடந்து வந்த பாதை தெரியாத எந்த இனமால் முன்னேறிச் செல்ல முடியும் சொல்லுங்கள்... இந்திய முஸ்லிம்களின் வரலாறு ஏன் பிள்ளைகளுக்கு நம் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் கூட போதிக்கப்படவில்லை?? அவுரங்கசீபைப் பற்றியும், அக்பரைப் பற்றியும் பொதுப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்கும் இஸ்லாமியப் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கும் தெரிந்த தகவல்களில் எத்தனை வித்தியாசம் நாம் காண முடியும்?? இதுதான்... இதெல்லாம்தான் நம் இஸ்லாமியப் பள்ளிகளின், இஸ்லாமியப் பாடத்திட்டங்களின் பெரும் பிழைகள். அடுத்து நிர்வாகமும், தொலைதூரத் திட்டமில்லாத பயணங்களும்.
முதலில் பாடத்திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம். என்னென்ன பாடங்களை நாம் திட்டத்தில் காண்கிறோம்? ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணிதம், வரலாறு, பூகோளம், கணிணிக் கல்வி, வட்டார மொழி / தாய் மொழி, அரபி, குர்’ஆன் மனனம், தஜ்வீத், சீறா. ஆனால் இதில் மாற்று மதத்தவர், அரசு பொதுப்பள்ளி திட்டத்திற்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அறிவியலில் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புக்களைப் பற்றிய பாடமில்லை. டார்வினின் பரிணாமத்தை முழுவதுமே அகற்றி விடுகிறோம். ஏன் அது சரியான வாதமல்ல என்பதற்கான விளக்கமான பாடம் இல்லை. அறிவியலாசிரியர்களுக்கே இதைப் பற்றி எந்தளவு தெரியும் என வியக்கிறேன். ஏனெனில் பல பள்ளிகளிலும், துறை சார்ந்த, அந்தந்த துறையில் மேலாய்வு செய்திட்ட, கற்றதோடு நில்லாமல் நடைமுறையில் அனுபவமும் பெற்றிட்ட ஆசிரியர்களை நாம் போடுவதில்லை. ஒன்றிரண்டு பள்ளிகளில் சரிவர இவ்விதியைக் கடைபிடித்தாலும் பல பள்ளிகளில் மனனம் செய்து கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தால் போதும் என்னும் நிலை. பின் எப்படி குழந்தைகள் கற்பர்? எப்படி குழந்தைகளின் அறிவோ ஆர்வமோ ஒரு பாடத்தில் மலரும்? எவ்வாறு பெட்டிக்கு வெளியே சிந்திக்கத் தூண்டும். அப்படித் தூண்டாத கல்வியினால் பயன் உண்டா?? சிந்தனை செய் சமூகமே...
அதே போல் நம் பள்ளிக்கூடங்களில் அரபியோ, தஜ்வீதோ, குர்’ஆன் ஹிஃப்தோ கற்றுத்தருபவர்கள் ‘இஜாஸா’ வைத்திருக்கிறார்களா என்றால் அதிகமான பதில், “இல்லை” என்றே வருகிறது. அந்த அளவு படித்த ஆலிம்களோ, ஆலிமாக்களோ தரக்கூடிய சம்பளத்திற்கு கிட்டவில்லை என்றால், இருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளியின் சார்பில் / அறக்கட்டளை சார்பில் கற்க அனுப்புகிறோமா அதுவும் இல்லை. பின், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னேறத் தூண்டும் உந்து சக்தி எது? ஆங்கிலவழிக்கல்வி என பெயர் சூட்டப்பட்டாலும் ஆங்கில வகுப்பில் மட்டுமே ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது. ஏனைய பாடங்களின் வகுப்புக்களில் வட்டார மொழியிலேயோ அல்லது ஆங்கிலமும் வட்டார மொழியும் கலந்தோ பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால் மொழியில் புலமை பெறும் எண்ணமோ, சீர் தூக்கிப் பார்க்கும், சரி வர கற்கும் எண்ணமோ சுத்தமாக அடிபட்டுப் போகிறது. இவை மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற குறைகள் உள்ளன. நிதி நிர்வாகத்தில் இருக்கும் உள்ள குறைகளைப் பற்றியோ, பள்ளி நிர்வாகத்தன்மையில் உள்ள பெரும் சறுக்கல்களைப் பற்றியோ பேச இந்தக் கட்டுரையில் இடமில்லை. எனினும் அவற்றையும் சரி செய்ய வேண்டிய நிலை இருப்பதை மறக்கவோ, மறுக்கவோ கூடாது.
ஆரம்பப் பள்ளிகளிலேயே இப்படி என்றால் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில்? மருந்துக்காவது தனிகுணநலன்களுடன் கூடிய மாணாக்கரைக் காண்கிறோமா? வேறு பாடத்திட்டங்களைக் காண்கிறோமா....அதுவும் இல்லை. அங்கேயும் அரசின் வழி பாடத்திட்டங்களோடு சிறிதே இஸ்லாமியக் கல்வியையும் சேர்த்துக் கொள்கிறோம். இதனால் சிறு வயதிலிருந்து பக்குவமடையும் வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எல்லாமே நாமே ஒரு வரைமுறையைக் கற்றுத் தருகிறோம். என்ன அது? இஸ்லாமியக் கல்வியும், அரபியும், எல்லாப்பாடங்களையும் போல இன்னொரு பாடமே. இதற்கென தனி முக்கியத்துவம் இல்லை. சரிதானே? இப்படித்தானே அந்த பிஞ்சு உள்ளங்கள், பாடத்திட்டங்களை எடை போடும்? இதற்கான மேன்மையை, தேவையை நம்மால் காட்ட இயலுமா... இதே வழியில் சென்றால் கண்டிப்பாக முடியாது. என்ன செய்யலாம்?
நம் சமூகத்திற்கென தனி கல்வித்துறை / குழுவின் அவசியம்:
இஸ்லாமிய தொடக்கப்பள்ளிலியிலிருந்து கல்லூரி வரையுள்ள அத்தனை பாடத்திடங்களையும் இஸ்லாமிய ரீதியிலேயே வரும்படி ஆவண செய்யவேண்டும் என்றால் அதற்கெல்லாம் முன், இஸ்லாமிய ஆசிரியர்களுக்கென்று தனிக்கல்வி, தனி பாடத்திட்டம் வேண்டும். இதை பரீசிலித்து வெளிக்கொணரவும், அரசின் அனுமதி பெறவும், அமல்படுத்தவும் ஒரு துறை / ஒரு கமிட்டி / ஒரு குழு நம் சமூகத்தில் அமைக்கப்பட வேண்டும். நம் சமூகத்தின் சிறந்த அறிஞர்களை, உலமாக்களை, அரபுலகிலும், வெளி நாடுகளிலும் இஸ்லாமியக் கல்விப்பணியில் புரட்சிகள்/தலையாய பணிகள் செய்துவருபவர்களை, இந்திய கல்வித்திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களையும், சமூகவியல் மூலம் சமூகத்தின் பதிலை ஆராய்ந்து வெளிப்படுத்தக் கூடியவர்களையும், ஒவ்வொரு துறையிலும் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களையும் கண்டறிந்து ஒரு குழு / துறை / கமிட்டி அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு துறையிலும் மெக்காலே பாடத்திட்டத்தின் படி இளங்கலை / முதுகலை முடித்த மாணவர்களுக்கு, அதே துறையை இஸ்லாமிய ரீதியில் அணுகவும், ஆராய்ச்சிகள் செய்யவும், கட்டுரைகள் வரையவும், பிறர்க்கு கற்பிக்கவும் தேவையான பாடங்களையும் பயிற்சிகளையும் தரும் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய கல்லூரிகளுடன் ஒப்பந்தமிட்டு அந்தந்த படிப்புக்களோடு இவற்றையும் கற்பிக்கக்கூடிய வகுப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இத்தோடு நின்றிடாமல் இனி வரும் காலங்களில் முழுக்க முழுக்க இஸ்லாம் காட்டித்தந்த வழியிலேயே (மெக்காலே வழியோ, மாற்று மேலை நாட்டு வழியோ இல்லாமல்) இளங்கலை / முதுகலைப் பாடங்களை படிக்க திட்டங்களும், மாற்றியமைக்கப்பட்ட பாடங்களும், பயிற்சிகளும் தரப்பட வேண்டும். இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்தக்குழுவின் பணிகள் ஒரு வருடத்திலோ ஐந்து வருடத்திலோ முடியக்கூடியவை அல்ல. காலம் தாழ்த்தப்படலாம். ஆனால் தரமே மிக மிக முக்கியமானது. அவ்வாறு திட்டமிட்டு, குழு அமைத்து பாடத்திட்டங்களும் வெளிவந்த பின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ அல்லது அதற்கும் மேலோ ஒரு குறிப்பிட்ட வரையறையில் இந்தப் பாடங்களும், பயிற்சிகளும் அந்தந்த கால முன்னேற்றத்தினை உள்ளடக்கியவையாக, அவற்றை எதிர்கொள்ளும் முறையில் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை பரீசிலிக்க வேண்டும். இப்படி ஒரு திட்டத்துடன் கல்வியாளர்களையும், கற்பிப்பவர்களையும், பாடத்திட்டங்களையும், பயிற்சிகளையும் பக்குவப்படுத்தும்போது, சமூக முன்னேற்றம் என்பது கைக்கெட்டும் தூரத்திலேயே உள்ளது.இஸ்லாமியப் பள்ளிகளின் தொலைநோக்குத் திட்டம்:
பாடத்திட்டங்களின் தோல்வியை விடவும் மிகப்பெரிய பிரச்சினை, தொலை நோக்கில்லாத பயணம். எடுத்துக்காட்டிற்கு போகும் முன், இஸ்லாத்தில், மார்க்கம் கற்றுத்தந்த வழி என்ன என்பதைப் பார்க்கலாம்.பள்ளிவாயில்களின் பங்கு:
நபியவர்களின்(ஸல்) காலத்தில் ஹிஜ்ரத் செய்த பின் முதன்முதலில் அமலாக்கப்பட்ட திட்டம் பள்ளிவாயில் அமைப்பது - மஸ்ஜிதுன் நபவி. அதனுள் இடம் பிரிக்கப்படும்போது முக்கியத்துவம் தரப்பட்ட விஷயம், மக்தப் - ஆரம்பப் பாடசாலைக்கான இடம் ஒதுக்கப்பட்டது. இன்றும் மேலை நாடுகளில் உள்ள இஸ்லாமியப் பள்ளிகள் பள்ளிவாயிலுடன் தொடர்புடையதாகவே உள்ளன. ஆனால் நம் தமிழக சமூகத்தில் இந்த நிலை இல்லை. இது மாற வேண்டும். நபியவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் பின்னே வந்தவர்களும் பள்ளிவாயிலை ஒட்டியே தங்களின் மதரஸாவையும் (உயர்நிலைப் பள்ளி), ஜாமி’ஆவையும் (பல்கலைக்கழகம்) வைத்திருந்தனர். அதன் பின் பல எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும் கண்ட இஸ்லாமிய சமூகம், தன்னிடத்திலிருந்து கற்றுக்கொண்டு அதில் வித்தியாசத்தை புகுத்திய மாற்று மதத்தினரின் கல்வி சார்ந்த வழிமுறைகளைக் கைக்கொண்டது. அதிலிருந்து இன்னமும் நாம் மீண்ட பாடில்லை. :(இன்று நம்மிடம் இருக்கும் அனைத்து இஸ்லாமியப் பள்ளிகளும் பள்ளிவாயில்களுடன் இணைய வேண்டும். வார இறுதிகளில் இமாமுடன் சேர்ந்து மற்ற ஆர்வமுள்ள சகோதரர்களும், சகோதரிகளும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் / குழந்தைகளுக்கான வர்க்ஷாப்கள் நடத்த வேண்டும். அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள உலகக் கல்வியிலிருந்து மார்க்கக் கல்வி வரையான பாடங்களில் புரிதலை ஏற்படுத்தும் வகையில் உதவ வேண்டும். இஸ்லாமிய வழிமுறையில் ஆராய்ச்சிகளையும் பரிசோதனைகளையும் செய்வதில் உதவிட வேண்டும். ஒவ்வொரு விடுமுறையின்போதும் பள்ளிவாயில்கள் வழியாக குர்’ஆன் வகுப்புக்களும், விடுமுறை கால சான்றிதழ் பாடங்களையும் தர வகை செய்ய வேண்டும். பள்ளிவாயில்கள் ஒவ்வொன்றிலும் சிறுவர் சிறுமியர், இளைஞி / இளைஞர்களுக்கென தனி குழுக்கள் அமைத்து அவர்களின் முன்னேற்றம், கல்வியில் பின்தங்கியிருந்தால் அதற்கான உபாயம், உதவி செய்ய வேண்டும். இதெல்லாம் நாளைய சமுதாயத்தை பள்ளிவாயிலின் பக்கம் ஆர்வமூட்டவும், அதனுடன் இணைந்து மார்க்கத்தில் வெற்றி பெறவும், சமூகத்தை முன்னெடுத்துச் செல்லவும் உதவிடும்.
சமூகத்தின் பங்கு:
நம் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினை, யாரையும் மதிப்பது. கல்வியில் சாதனை புரிபவர்களையும், சின்ன சின்ன மைல்ஸ்டோன்களை தாண்டுபவர்களையும் உரிய அங்கீகாரம் நாம் செய்வதில்லை. நம்முடைய ஊடகங்கள் மூலம் கௌரவப்படுத்துவதில்லை. இந்த appreciation என்பது மிக மிக தேவையானது என்பதை அறிந்து அதை செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.முடிவுரை:
சமூகத்தின் பங்கையும், பள்ளிவாயில்களின் பங்கையும் தனியே ஒரு ஆய்வாக்கி அதை சரியான விதத்தில் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் பிடிப்பு ஏற்பட்டு, சமூகம் ஒரு குழுவாக, ஒரு வழியே பயணித்து வெற்றி காண இயலும். இன்ஷா அல்லாஹ்.*******************
அடிக்குறிப்புகள்:
A1. http://www.satyamargam.com/1547A2. http://en.wikipedia.org/wiki/Sachar_Committee
A3: http://en.wikipedia.org/wiki/University_of_al-Karaouine
1. ”அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா?” (39:9)
2. “என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக!” என்றும் இறைஞ்சுவீராக!” (20:114)
3. உதாரணமாக ''...பருவகாலத்தில் எவ்வாறு கனிகின்றன என்பதனைச் சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள்! இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்குத் திண்ணமாக இவற்றில் பல சான்றுகள் உள்ளன.'' (6:99)
4. 35:28 மேலும், இவ்வாறே மனிதர்கள், விலங்குகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகின்றார்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.
5. “யார் கல்வியைத் தேடி ஒரு பதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். ” என அறிவிக்கப்பட்டுள்ளது. (அறிவிப்பவர் அபூ ஹுரைரா: முஸ்லிம் 5231).
6. ஒருவன் பிறருக்குக் கற்பித்து பரவச் செய்த கல்வி, அவன் விட்டுச் சென்ற நல்லொழுக்கமுள்ள சந்ததி, அவன் விட்டுச் சென்ற (பயனுள்ள) நூல், அவன் கட்டிய பள்ளிவாசல், வழிப்போக்கர்களுக்காக எழுப்பிய விடுதி, அவன் வெட்டிய ஆறுகள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழும் போது தனது பொருளிலிருந்து அவன் செய்த தர்மங்கள் ஆகியவை ஒரு மனிதனது மரணத்திற்குப் பின்னரும் பயனளிக்கும் நல்லறங்களில் உள்ளவையாகும். இவற்றின் நன்மைகள் அவனது மரணத்திற்குப் பின்னரும் அவனுக்குக் கிடைக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) இப்னு மாஜா:242, இப்னுகுஸைமா)
7. Al Nadvi & Moinuddin, Survey of Muslim Education: India (Cambridge: The Islamic Academy, 1985), pg5.
8. "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
9. Ghulam „Ali Azad Bilgirami (d. 1785) Ma’athir al-Kiram - referred in Sayyid Manazir Ahsan Gilani, Pak-o-Hind main Musalmanon ka Nizam-e-Ta‘lim-o-Tarbiyyat. (Lahore: Maktaba
Rahmaniyya, n.d.) 19.
10. Ibid, 21.
11. „Abd al-Hayy al-Hasani, al-Thaqafah al-Islamiyyah fi al-Hind, (Damascus: Mujamma„ al-Lugha al-„Arabiyyah bi
Dimashq, 1983), 135.
12. Ibid, 9-10.
13. Gilani, 139. Also cited by Nizami in Khaliq Ahmad Nizami, Islami Tehzib ka Asar Hindustan par, (Lucknow,
Majlis Tehqiqat-o-Nashriat-e-Islam, 1982), 42.
14. Al-Nadvi & Moinuddin, 4.
15. Ibid, 5.
16. http://en.wikipedia.org/wiki/Dars-i_Nizami
17. Gilani, 155
18. Sahih al-Bukhari, Sahih Muslim, Jami‘ Tirmidhi, Sunan Abu
Dawud, Sunan al-Nisa’i and Sunan Ibn Majah and al-Muwatta of Malik.
19.http://www.readislam.net/sihah.html
20. http://www.natpu.in/?p=27728
21. Yoginder Sikand, Bastions of the Believers. Madrasas and Islamic Education in India
22. http://www.thoothuonline.com/மே-4-மாவீரன்-திப்புசுல்தா/
23. http://www.1001inventions.com/
24. புகாரி-பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6228, அறிவிப்பாளார்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி)
25. http://www.scribd.com/doc/32659313/Al-Attas-Islam-and-Secularism
26. யார் இந்த 'மு'அத்தபீன்கள்? 'அதப்' என்னும் வார்த்தையில் இருந்து தோன்றிய பெயரே அது. "அதபை சொல்லித் தருபவர்கள்" அதாவது குழந்தைகளுக்கு நன்னடத்தையையும், நல்ல குணநலன்களையும் சொல்லித்தருபவர்கள். அந்த காலங்களில் அரேபிய வழக்கப்படி 'மு'அத்தபீன்' எனப்படுபவர்களிடம் குழந்தைகளை அனுப்பி பாடம் படிக்க வைப்பதும், அல்லது 'மு'அத்தபீன்'களை வீட்டீலேயே வரவைத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதும் பொதுவான ஒரு செயல்.
27. http://www.youtube.com/watch?v=PbqypNG6trk - The Mother of Imam Ahmad Ibn Hanbal (ra) by Dr. Hesham al-Awadi
28. நபி (ஸல்) கூறினார்கள்
நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன். (அஹ்மத், பைஹகீ)
29. 68:4 மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்.
30. நிலமெல்லாம் இரத்தம் தொடர் - 7 - புத்தியால் வெல்வது (நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 டிசம்பர், 2004)
31: அவர்களின் வரலாறுகளில் அறிவுடைய மக்களுக்குப் படிப்பினை உள்ளது'' (12:111)
32: http://en.wikipedia.org/wiki/Tawakkol_Karman
33: http://en.wikipedia.org/wiki/Nana_Asma%E2%80%99u
34: http://en.wikipedia.org/wiki/Farhat_Hashmi
35. http://www.ethirkkural.com/2012/04/blog-post_27.html
36. http://chnm.gmu.edu/wwh/p/214.html
37. “If you educate a man, you educate an individual. If you educate a woman, you educate a nation.” Dr. Kwegyir Aggrey (1872-1927), preeminent Ghanaian scholar and educator.
38. http://www.countercurrents.org/farooqi090311.htm
39. http://www.nytimes.com/2007/02/25/magazine/25wwlnEssay.t.html?_r=0
40.http://twocircles.net/2011jul03/educating_muslim_women_modern_india_problems_and_perspectives.html
41.http://www.rebeccaproject.org/index.php?option=com_content&task=blogcategory&id=87&Itemid=203
42. http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=524
நன்றிகளுடன்:
SOME ASPECTS OF THE MUSLIM EDUCATIONAL SYSTEM IN PRE-
COLONIAL INDIA
by Amer Bashir (PhD ABD, ISTAC )
===================
http://www.sheikhagar.org
===================
http://www.islamicity.com/mosque/ihame/Sec11.htm
===================
http://scholarspen.blogspot.com/2004/09/introduction-to-renowned-dars-e-nizami.html
===================
http://twocircles.net/2011nov02/decline_muslims_nothing_do_%E2%80%98neglect%E2%80%99_science_and_technology.html
===================
நிலமெல்லாம் இரத்தம் | பா. ராகவன்
===================
http://www.muslimheritage.com
===================
https://www.youtube.com/watch?v=AzJP-MGaTz4
===================
http://www.youtube.com/watch?v=gev0pR42cDk
--Nouman ali khan - Islamic schools and education in USA
***************************
.islamiyapenmani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக